(Source: Poll of Polls)
TASMAC Diwali Sales: களைகட்டிய தீபாவளி .. ஜெட் வேகத்தில் ஏறிய டாஸ்மாக் கலெக்ஷன்.. 2 நாட்களில் இத்தனை கோடியா?
நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடத்தப்படும் டாஸ்மாக் கடைகள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட எந்த பண்டிகை வந்தாலும் விற்பனையில் களைகட்டும்.
தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களில் தமிழ்நாட்டில் ரூ.467 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட கூடுதலாகும்.
தமிழக அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகள் என்பதில் மறுப்பேதும் இல்லை. நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடத்தப்படும் டாஸ்மாக் கடைகள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட எந்த பண்டிகை வந்தாலும் விற்பனையில் களைகட்டும். அதேபோல் வார கடைசி நாட்கள், டாஸ்மாக் கடை ஏதேனும் தலைவர்கள் பிறந்தநாள், திருவிழா உள்ளிட்ட காரணங்களுக்காக மூடப்படுவதற்கு முதல் நாள் என விற்பனை ஜோராக நடைபெறும்.
இந்நிலையில் நேற்று (நவம்பர் 12) தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் முக்கிய பண்டிகையை முன்னிட்டு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படும் நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களில் ரூ.467 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதில் 11ஆம் தேதி 221 கோடி ரூபாய்க்கும், 12 ஆம் தேதி 246 கோடி ரூபாய்க்கும் விற்பனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் நவம்பர் 11 ஆம் தேதி மதுரையில் ரூ.52.73 கோடி, சென்னையில் ரூ.48.12 கோடி, கோவையில் ரூ.40.20 கோடி, திருச்சியில் ரூ.40.02 கோடி, சேலத்தில் ரூ.39.78 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றதாகவும், நவம்பர் 12 ஆம் தேதி திருச்சியில் ரூ.55.60 கோடி, சென்னையில் ரூ.52.98 கோடி, மதுரையில் ரூ.51.97 கோடி, சேலத்தில் ரூ.46.62 கோடி, கோவையில் ரூ.39.61 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. ஆனால் இதுகுறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மண்டல அளவை பொறுத்தவரை மதுரை, திருச்சி மண்டலங்களிலேயே அதிக அளவில் மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரூ.431.03 கோடிக்கு மது விற்பனை நடைபெற்ற நிலையில், 2022 ஆம் ஆண்டு ரூ. 464.21 கோடியாக அதிகரித்தது. இந்நிலையில் இந்தாண்டு மதுவிற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.