கனமழை காலத்தில் மின்னல், இடியிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி? பேரிடர் மேலாண்மை அட்வைஸ் இதோ!
கனமழை காலத்தில் மின்னல், இடியிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பது குறித்து பேரிடர் மேலாண்மை அறிவுரை வழங்கியுள்ளது.
தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதனால், தெற்கு ஆந்திரா – வட தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து நிலைகொள்ளக்கூடும்.
அரபிக்கடலில் கோவா அருகே மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இரு புறங்களிலும் காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் நிலவுவதால், தமிழ்நாட்டில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி , வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வருகிறது. தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று மற்றும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கனமழை காலத்தில் மின்னல், இடியிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பது குறித்து பேரிடர் மேலாண்மை அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி,
மின்னல், இடியிலிருந்து தற்காத்துக் கொள்ள கட்டாயம் செய்ய வேண்டியவை :
1. கனமழை காலத்தில் மின்னல், இடி இடிக்கும் போது வெட்டவெளியில் உயரமான இடங்களில் பயணிப்பது, நடப்பதை தவிர்க்கலாம். அப்படி அந்த இடங்களில் இருந்தால் கைகளால் கால்களை இறுக்க அணைத்து தரையில் அமர்ந்து கொள்வது நல்லது. இதனால் மின்சாரம் நம் உடல் வழியாக செல்வதை தடுக்க முடியும்.
2. மின்னல் வெட்டும்போது வீட்டில் சொல்வது போல் செல்போன்கள் போன்றவற்றை பயன்படுத்தாமல் இருக்கலாம்.
3. கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் பயணிக்குபோது இடி, மின்னலில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
4. மின்னல், இடி இடிக்கும் போது பொதுவெளியில் இருக்கும் மரங்களில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை கட்டாமல் தவிர்க்கலாம்.
5. உங்களை சுற்றி இருக்கும் பகுதிகளில் அதிகப்படியான மின்னல் ஏற்படுவதை உணர்ந்தால் உடனடியாக கை மற்றும் கால்களை கட்டிக்கொண்டு தரையில் அமர்ந்து கொள்வது பாதுகாப்பு அளிக்கும்.
செய்யக்கூடாதவை :
1. மின்னல், இடி இடிக்கும் போது வீடுகளில் உள்ள உலோக பொருட்களுக்கு அருகில் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
2. மின்னல், இடி இடிக்கும் போது குடையை பயன்படுத்த கூடாது என்பது முக்கியமான ஒன்று.
3. ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளுக்கு அருகில் செல்லவேண்டாம்.
4. இரும்பு கம்பியினால் உருவாக்கப்பட்ட வேலி, கைப்பிடி போன்றவை அருகில் செல்வதை தவிர்க்கலாம்.
5. மிக முக்கியமாக மின் சாதனங்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
மின்னல், இடியிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பது குறித்து பேரிடர் மேலாண்மை அறிவுரை வழங்கியுள்ளது. மேலும், மாநில அவசர கட்டுப்பாட்டு அறை எண் 1070, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை எண் 1077 என்ற அவசர கால தொலைபேசி எண்களையும் வழங்கியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்