“கருணாநிதியை விட ஸ்டாலின் இல்லை; ஸ்டாலினை விட உதயநிதி...” - புகழ்ந்து தள்ளிய கரு. பழனியப்பன்..!
உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் கரு. பழனியப்பன், ஸ்டாலினை விட உதயநிதி ஆபத்தானவர் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். அந்த தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மு.க.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.
அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. கடந்த 17 மாதங்களாக அவ்வப்போது உதயநிதி அமைச்சராகப் போகிறார் என்ற தகவல் மட்டும் வந்துக் கொண்டே இருந்தது.
இதை அமைச்சர்களும் உறுதி செய்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில், டிசம்பர் 14 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு புதிய அமைச்சராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழ்நாட்டின் 35வது அமைச்சராக உதயநிதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பின்னர், ஆளுநர் பூங்கொத்து கொடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துப் பெற்ற உதயநிதி, காலில் விழுந்து ஆசி பெற்றார்.
இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உள்பட குடும்ப உறுப்பினர்கள், தமிழ்நாட்டின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
உதயநிதிக்கு நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் கரு. பழனியப்பன், ஸ்டாலினை விட உதயநிதி ஆபத்தானவர் என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பேஸ்புக் பக்கத்தில், "கருணாநிதியை விட ஆபத்தானவர் ஸ்டாலின், என்று கதறியவாளுக்குத் தெரியும், ஸ்டாலினை விட ஆபத்தானவர் உதயநிதி என்று. கூடுதல் பொறுப்புக்கு வாழ்த்துக்கள் சின்னவரே" என பதிவிட்டுள்ளார்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, ஒரே ஒரு செங்கலை வைத்து கொண்டு உதயநிதி செய்த பிரச்சாரம் மாநிலம் முழுவதும் பேசுபொருளானது. குறிப்பாக, மக்கள் மத்தியில் அந்த பிரச்சாரம் எடுப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.
உதயநிதி ஸ்டாலினை நடிகராகவே கடந்த 2019 ஆம் ஆண்டு வரை மக்கள் அறிந்திருந்தனர். அவரின் தாத்தா கருணாநிதியின் மறைவுக்குப் பின் மெல்ல மெல்ல அரசியல் நிகழ்வுகளில் களம் கண்ட உதயநிதி 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல் முறையாக அரசியல் மேடையில் களம் கண்டது குறிப்பிடத்தக்கது.