கோமகன் கேட்ட கேள்விதான் ’ஒவ்வொரு பூக்களுமே’ பாட்டுக்கு விதை.. இயக்குநர் சேரன்
கடைசியா என்கிட்ட பேசுனப்போ, 'சார், நாங்க ரொம்ப நல்லா இருக்கோம். கஷ்டப்பட்டு சம்பாதிச்சது மூலமா என்னோட இருக்குற குடும்பங்கள் எல்லாத்துக்கும் வீடு வாங்கி கொடுத்திருக்கேன்னு' சொன்னார். இவர் ட்ரூப்ல குறைந்தது இருபது பேராவது இருப்பாங்க. ''
இயக்குநர் சேரன் எடுத்த 'ஆட்டோகிராப்' படத்தில் 'ஒவ்வொரு பூக்களுமே' பாடல் மூலம் ஃபேமஸ் ஆனவர் கோமகன். மாற்றுத்திறனாளியான கோமகன் பார்வையற்றவர்களுக்காக ஆர்கெஸ்ட்ரா ஒன்றையும் நடத்தி வந்தார். தமிழக அரசின் கலைமாமணி விருது வாங்கியிருக்கும் கோமகன் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது நினைவுகள் குறித்து நம்மிடம் இயக்குநர் சேரன் பகிர்ந்து கொண்டார்.
''எப்போதும் காலையில அஞ்சு மணிக்கு எந்திருச்சிருவேன். எந்திரிச்ச உடனே செய்தித்தாள்கள், வாட்சப் குரூப் எல்லாம் பார்ப்பேன். ஆனா, இன்னைக்கு காலையில எந்திரிச்ச உடனே எந்த நியூஸ் பார்க்கல. கொஞ்ச நேரம் கழிச்சு வாட்சப் பார்த்தப்போதான் கோமகன் இறப்பு செய்தி தெரிஞ்சது. ரொம்ப ஷாக்கா இருந்தது. ஏன்னா, கடந்த வருஷம் கொரோனா காலத்துல தான் ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தார். இவரை நம்பி பார்வை இழந்தவங்க நிறைய பேர் இருக்காங்க. இவங்க எல்லாம் கடந்த லாக்டவுனப்போ கஷ்டப்பட்டாங்க. இவங்களுக்கு தேவையான உதவிகள் கேட்டு ஃபேஸ்புக்ல பதிவு போட்டிருந்தார். இதைப் பார்த்துட்டு கோமகனுக்கு போன் பண்ணி பேசுனேன். என்னால முடிஞ்சது பண்ணுனேன். தவிர,வெளிநாட்டில் இருந்தும் நிறைய உதவிகள் கிடைச்சிருந்தது. தவிர, ஆன்லைன்ல மியூசிக் ஸ்கூல் ஆரம்பித்திருந்தார். ஏன்னா, 'இதுல இருந்து வரக்கூடிய வருமானம் கஷ்டப்படுறவங்களுக்கு உதவியா இருக்கும்னு' சொன்னார். இந்தளவுக்கு தன்னம்பிக்கை கொண்ட நபர்தான் கோமகன். தன்னை சுத்தியிருக்குறவங்களுக்கும் எப்போதும் நன்மை செய்யக்கூடிய ஒருத்தர். ''
'' என்னோட 'ஆட்டோகிராப்' படத்துலதான் அறிமுகமானார். சொல்லப்போனா, 'ஒவ்வொரு பூக்களுமே' பாட்டு எடுக்கறதுக்கு கண் தெரியாதவர்களை தேடிக்கிட்டு இருந்தேன். அப்போ என்னுடைய ஆபிஸுக்கு வந்தவர்தான் கோமகன். முதல்ல, 'ஒவ்வொரு பூக்களுமே' பாட்டு வேற மாதிரி எடுக்கிற மாதிரி இருந்தது. 'சார், ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ பாட்டு படத்துல வெச்சிருக்கீங்க. நீங்களே குறையா காட்ட வேண்டாம்னு' சொன்னார். இவர் கேட்ட கேள்வியின் காரணமாக காட்சியோட அமைப்பை மாத்திட்டு தன்னம்பிக்கை கொடுக்குற மாதிரி கொண்டுவந்தேன். பெரியளவுல ரீச்சும் கிடைத்தது. ஒரு படத்தோட வெற்றி இயக்குநருக்கானது மட்டும் கிடையாது. படத்துல பங்கேற்ற ஒவ்வொருத்தவருக்குமானது. ஒரு மனிதனுடைய வாழ்க்கையை மாத்துறதுக்காககூட ஒரு படம் வெற்றியடையும். இப்படித்தான் நான் பார்த்துட்டு வரேன். நிறைய பேருக்கு 'ஆட்டோகிராப்' மறுவாழ்வு கொடுத்தது. இதுல ஒருத்தர்தான் கோமகன். ரொம்ப கஷ்டப்பட்ட ட்ரூப் 'ஆட்டோகிராப்' வெற்றிக்கு பிறகு உலக முழுக்க போயிட்டு வந்தாங்க. இந்த சந்தோஷத்தை நிறைய இடத்துல சொல்லியிருக்கார். கடைசியா என்கிட்ட பேசுனப்போ, 'சார், நாங்க ரொம்ப நல்லா இருக்கோம். கஷ்டப்பட்டு சம்பாதிச்சது மூலமா என்னோட இருக்குற குடும்பங்கள் எல்லாத்துக்கும் வீடு வாங்கி கொடுத்திருக்கேன்னு' சொன்னார். இவரது ட்ரூப்ல குறைந்தது இருபது பேராவது இருப்பாங்க. ''
''இவருக்கு கலைமாமணி விருது கிடைச்ச உடனே போன் பண்ணி பேசினார். நானும் சந்தோசப்பட்டேன். எப்போதும் நன்றியுடன் இருக்கக்கூடிய மனிதர். 'இந்த வாழ்வு 'ஆட்டோகிராப்' படத்தின் வாயிலாக உங்க மூலம் கிடைத்ததுன்னு சொல்லுவார். சினிமா உலகத்துல நன்றியை எதிர்பார்க்க கூடாதுனு சொல்லுவாங்க. என் சினிமா வாழ்க்கையை பொருத்த வரைக்கும் நிறைய பேர் நன்றியுடன் இருந்திருக்காங்க. இதுல இவர் ரொம்ப முக்கியமானவர். எல்லா காலகட்டத்திலும் இதை உச்சரிக்க மறந்தது இல்ல. எப்போதும் தொடர்ந்து பேசிக்கிட்டுதான் இருந்தேன். இப்போ இவருடைய இறப்பு செய்தி கேட்டுட்டு கோமகன் மனைவிகிட்ட போன்ல பேசுனேன். கொரோனா தொற்றுனால உடலை பார்க்க முடியாத காரணத்துனால வீட்டுக்கு ஒரு நாள் வரேன்னு' ஆறுதல் சொன்னேன்'' என்று முடித்தார் சேரன்.