’வீடுகளுக்கே சென்று டயாலிசிஸ்’ - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தது சாத்தியமா?
சிறுநீரக செயலிழப்புக்கு டயாலிசிஸ் சிகிச்சையும் வீட்டுக்கே சென்று அளிக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஒட்டுமொத்த மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு ரூ.257 ரூபாய் ஒதுக்கியிருக்கிறது.
இந்தியாவிலேயே முதல்முறையாக வீடுகளுக்கே சென்று மக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மக்களுக்கான மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்தத் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சமனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவருக்கு அவரது வீட்டுக்கே சென்று மருந்துபெட்டியை வழங்கினார் முதலமைச்சர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் மற்றும் சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதய நோய், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோர் உள்ளிட்ட நோயாளிகளுக்கு, வீடுகளுக்கே நேரடியாகச் சென்று தேவையான மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் வழங்க, இந்தியாவிலேயே முதன்முறையாக, 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்தது. நாட்பட்ட நோய்களைத் தடுக்கும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள், சமுதாய சுகாதார அதிகாரிகள், நகர்புற சுகாதார அதிகாரிகள் மற்றும் வட்டார மருத்துவ அதிகாரிகள் இந்தத் திட்டத்தைக் கண்காணிப்பார்கள்.
இந்தத் திட்டத்தின் கீழ் சிறுநீரக செயலிழப்புக்கு நோய்க்கான டயாலிசிஸ் சிகிச்சையும் வீட்டுக்கே சென்று அளிக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக இந்த மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு அரசு 257 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் டயாலிசிஸுக்கு மட்டும் நாளொன்றுக்கு 1500 முதல் 3500 ரூபாய் வரை செலவாகிறது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம்தான் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் மக்களுக்கான இலவச டயாலிசிஸ் சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக 70 டயாலிசிஸ் இயந்திரங்களை மாநகராட்சி நிர்வாகம் தருவித்தது. இதற்கிடையேதான் தற்போது மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கே சென்று டயாலிசிஸ் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸுக்கு என்று பலகோடிகள் அரசு நிதி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
ஆனால் வீடுகளுக்கே சென்று டயாலிசிஸ் செய்வது சாத்தியமா?, டயாலிசிஸ் செய்வதற்கான நுணுக்கத்தை அறிதல் டயாலிசிஸ் செய்பவர் மிகச் சுத்தமாகக் கருவியைக் கையாளுதல் இதில் மிகமுக்கியமானவை. இதில் மற்றொருபக்கம் டயாலிசிஸுக்கான தினசரிச் செலவும் அதிகமாகும். இதற்கிடையே முதலமைச்சரின் இந்த அறிவிப்பு எந்த அளவுக்குச் சாத்தியம் என்கிற கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்துப் பேசிய முன்னாள் பொதுச்சுகாதார இயக்குநரும் சுகாதாரத்துறை சிறப்பு அதிகாரியுமான மருத்துவர் குழந்தைசாமி
’கிராமப்புறங்களில் அரசு சுகாதார நிலையங்களே மருத்துவ முகாம்களை நடத்துகின்றன ஆனால் அந்த முகாம்களுக்குக் கூட வரமுடியாத சூழலில் நாட்பட்ட நோயுடைய மக்கள் இருப்பார்கள். அவர்களையும் சென்று சேரும் நோக்கத்திலேயே தற்போது இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்த மேலதிக விவரங்களை வீடுவீடாகச் சென்று பார்ப்பதற்கு ஆட்கள் கிடையாது. அவர்களைச் சென்று சேர்வதற்குதான் இந்த மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இதற்காக கிராமப்புறங்களில் வட்டார அளவில் பிசியோதெரபி நிபுணர்கள் வரை நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் சிறுநீரக டயாலிசிஸ் வீட்டில் சாத்தியமில்லை. பெரிடோனியல் டயாலிசிஸ் எனப்படும் வயிற்றில் துளையிட்டுச் செய்யும் டயாலிசிஸ் மட்டும் இந்தத் திட்டத்தின் மூலம் செய்ய வாய்ப்பு அதிகம்.அதுவுமே வீட்டிலேயே மெஷின் இருந்தால் மட்டுமே சாத்தியம். அல்லது செவிலியர்களுக்கு அதற்கான பயிற்சியை அளித்திருக்க வேண்டும். அதிகபட்சமாக டயாலிசிஸ் செய்யும்போது மருத்துவரின் மேற்பார்வையில் அதனைச் செய்வதை உறுதிபடுத்தலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கிடையே முதலமைச்சர் இப்படி அறிவித்திருக்கும் நிலையில் அரசு இந்தத் திட்டத்தை எப்படிச் செயல்படுத்தும் என அரசு விளக்கம் அளிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.