DGP Sylendra Babu: ”சினிமா படங்கள் வெளியாகும்போது ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம்” - டி.ஜி.பி. அறிவுரை
சினிமா படங்கள் வெளியாகும்போது ஆபத்தான செயல்களில் இளைஞர்கள் ஈடுபட வேண்டாம் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
DGP Sylendra Babu : சினிமா படங்கள் வெளியாகும்போது ஆபத்தான செயல்களில் இளைஞர்கள் ஈடுபட வேண்டாம் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்தவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அதிரடி படை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் கடந்த 9-ந் தேதி தொடங்கிய அகில இந்திய போலீஸ் துப்பாக்கி சுடும் போட்டி, வருகிற 13-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் போலீசார், மத்திய காவல் அமைப்பினர் ஆண், பெண் உள்பட 700 துப்பாக்கி சுடும் வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டனர்.
டிஜிபி வேண்டுகோள்
நேற்று நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். பின்னர் நிரூபர்களுக்கு பேட்டி அவர் கூறியதாவது, ”சினிமா படங்கள் வெளியாகும்போது ஆபத்தான செயல்களில் இளைஞர்கள் ஈடுபட வேண்டாம். வாகனங்கள் மீது ஏறுவது, ராட்சத கட்அவுட், பேனர்கள் மீது ஏறுவது மிகவும் ஆபத்தானது. படித்து வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழலில் இளைஞர்கள் இது போன்ற செயலில் ஈடுபடும் போது அவர்களது குடும்பத்தினர் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்” என்று கூறினார்.
அஜித் ரசிகர் உயிரிழப்பு:
முன்னதாக, இரண்டு நாட்களுக்கு முன், சென்னையில் நடிகர் அஜித்தின் துணிவு படம் பார்க்க வந்த விபத்தில் ரசிகர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் துணிவு படம் பார்க்க வந்த சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பரத்குமார் என்ற 19 வயது இளைஞர் ஆர்வ மிகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்ற லாரி மீது ஏறி ஆடியுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கீழே விழ, முதுகுத்தண்டில் அடிபட்டு காயம் அடைந்தார். உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரத்குமார் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரசிகர்கள் மோதல்:
மேலும், ரோகிணி தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த அஜித் - விஜய் பேனர்களை ரசிகர்கள் கிழித்தெறிந்தனர். ரோகினி தியேட்டரில் இருந்த முன்பக்கம் இருந்த கண்ணாடிகளை உடைத்தனர். இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அன்று பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் வாரிசு, துணிவு பட வெளியிட்டீன்போது ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க