நேற்று பிறந்த குழந்தைகளுக்கு ஜாக்பாட்.. மோதிரத்துடன் சென்ற திமுக நிர்வாகிகள்
udayanidhi Stalin birthday : " காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நவம்பர் 27-ல் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது "
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நவம்பர் 27-ல் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் குழந்தை பெட்டகத்தை வழங்கிய காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்.
துணை முதலமைச்சர் பிறந்தநாள்
தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது 47-வது பிறந்த நாளை நேற்று வெகு சிறப்பாக கொண்டாடினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முதலமைச்சர் மற்றும் திமுக தலைவரான மு.க.ஸ்டாலினிடமும் தாயார் துர்கா ஸ்டாலினிடமும் வாழ்த்துகளை பெற்றார். அப்போது ஸ்டாலின் அவருக்கு முத்தம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
அதன்பின், மெரினா கடற்கரை வந்த அவர், அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். அப்போது, நினைவிட பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதுடன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியிடமும் வாழ்த்து பெற்றார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அவரது பிறந்த நாளில் முன்னிட்டு வாழ்த்து தெரிவித்தனர் .
தமிழ்நாடு முழுவதும் திராவிட முன்னேற்ற கழகம் தொண்டர்கள் மற்றும் திமுக இளைஞரணியை சேர்ந்த நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடினர். அந்தவகையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் துணை முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கினர்.
காஞ்சிபுரத்தில் கொண்டாட்டம்
இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நவம்பர் 27 ஆம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு காஞ்சி தெற்கு மாவட்ட இளைஞரணி அணி அமைப்பாளர் யுவராஜ் ஏற்பாட்டில் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நவம்பர் 27 ஆம் தேதி பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் குழந்தை பெட்டகத்தை காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் குழந்தைகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளர் சி.கே.வி.தமிழ்செல்வன், மாவட்ட பொருளாளர் சின்பிராண்ட ஆறுமுகம்,பகுதி செயலாளர்கள், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள், திமுக நிர்வாகிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.