TN Rain Cyclone : நாளை மாலை உருவாகிறது புயல்.. இன்னும் இரண்டு நாட்களில் 5 மாவட்டங்களை மிரட்டவரும் பெருமழை..
நாளை மாலை புயல் உருவாக வாய்ப்பு இருக்கிறது. இந்தப் புயல் வலுப்பெற்று, சென்னை மற்றும் அதனைச்சுற்றியுள்ள மாவட்டங்களை நோக்கி வருவதற்கு வாய்ப்பு அதிகம். இதனால் அதீத கனமழை மற்றும் சூறாவளிக்கு வாய்ப்பு.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம், தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. வலுவடைந்து வரும் இந்தக் காற்றழுத்தம், நாளை மாலை நேரத்தில், புயலாக உருப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், நாளை மறுநாள் முதல் கனமழை முதல் அதிகனமழையும், சூறாவளி காற்றும் வருவதற்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இந்தப்புயலின் தாக்கம் அதிகம் இருக்க வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
வலுப்பெறும் காற்றழுத்தம்:
டிசம்பர் மாதம் தொடங்கியவுடன், வடகிழக்கு பருவமழை காலத்தின் மையப்பகுதி என்பதால், பெருமழை கொட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெல்டா மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்தது. புள்ளி விவரங்களின் அடிப்படையில் சொல்ல வேண்டுமென்றால், டிசம்பர் முதல் வாரத்தில் இயல்பை விட , மழையின் அளவு குறைவாகவே இந்த முறை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச்சூழலில்தான், கடந்த இரு தினங்களுக்கு முன் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தமானது, தற்போது வலுப்பெற்று வருகிறது.
உருவாகும் புயலுக்கு "மான்டஸ்" என பெயர்:
புயல்தொடர்ந்து வலுப்பெற்று வரும் இந்தக் குறைந்த காற்றழுத்தம், 6-ம் தேதி பிற்பகல் நிலவரப்படி, தீவிர மண்டலமாக மாறி, நாளை மாலை புயலாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு, இந்தியப் பெருங்கடலுக்கு உட்பட்ட நாடுகள் கூட்டமைப்பின் சார்பில் சூட்டப்படும் பெயர்களின் அடிப்படையில், மான்டஸ் (Mandous) எனப் பெயர் வைக்கப்படும். இது, ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் வைக்கப்பட்ட பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.
மழை பொழிவு எங்கே அதிகம்?
இந்தப்புயலானது வலுப்பெற்று, வடதமிழகம் மற்றும் தென் ஆந்திரத்திற்கு இடையிலான கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை காலை முதல் மழை பெய்யத்தொடங்கும் என்றும் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். மேலும், 9-ம் தேதி மட்டும் சில இடங்களில், அதீத கனமழை பெய்வதற்கும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. தற்போதே பல துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. மேலும், துறைமுகங்களில் புயல் பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
எங்கெல்லாம் ரெட் அலர்ட்:
இந்தப் புயலின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழையின் பாதிப்பும் காற்றின் பாதிப்பும் இருக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள், கணினி அடிப்படையில் கணித்துள்ளனர். அதுவும் வரும் 9-ம் தேதி, சில இடங்களில் அதீத கனமழை பெய்யும் என்றும் இந்த மழையின் தாக்கம் பல மணி நேரங்களுக்கு இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்திய வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ வரைப்படங்களின் அடிப்படையில், வரும் 9-ம் தேதி, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
கடலில் மேற்பகுதியில் பெரும் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போது மீன்பிடித் தொழிலுக்குச் சென்றவர்களுக்கும் எச்சரிக்கைக் கொடுக்கப்பட்டு, உடனே கரைக்குத் திரும்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புயல் எங்கே கரையை கடக்கும்?
தற்போது நிலவரப்படி, கணினி அடிப்படையில் பார்க்கும் போது, இந்த புயலானது சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே உள்ள கரை பகுதியை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், காற்றழுத்த மண்டலமாகி, வலுப்பெறும் போது, அது மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து செல்வதால், துல்லியமாக இங்குதான் கரையைக் கடக்குமா அல்லது கரையை கடக்காமலே வேறு திசைக்கு மாறுமா என்பதை தற்போது கணிக்க இயலாது எனக் கூறப்படுகிறது. ஆனால், சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையேயான கரைப் பகுதியை நோக்கி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தற்போது கணிக்கப்பட்டுள்ளது. சட்டென்று மாறக்கூடியது வானிலை என்பதால், அந்தந்த நேரத்தை வைத்துதான் உறுதியாக தகவலைத்தரமுடியும் என வானிலையாளர்கள் தெரிவித்துள்ளதால், தொடர்ந்து வானிலை நிலவரங்களைக் கவனித்தால்தான், எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை அறிய முடியும்.