DMK Alliance: ஆடிப்போன ஸ்டாலின் ”தமிழகத்தில் அதிக ஆணவக் கொலைகள், தலித் கொடுமைகள்" கூட்டணி கட்சி போட்ட பழி
DMK Alliance: நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக ஆணவக் கொலைகள் நடைபெறுவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
DMK Alliance: தமிழ்நாட்டில் அனுதினமும் தலித் கொடுமைகள் நிகழ்வதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வேதனை தெரிவித்துள்ளார்.
பெரியார் நினைவு தினம்:
பகுத்தறிவு பகலவன் என கொண்டாடப்படும் தந்தை பெரியாரின் 51வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, அவரது உருவசிலைக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
”தொடரும் ஆணவக் கொலைகள்”
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கும் மேலாக பெரியாரின் வழிவந்த திராவிட இயக்கங்கள் தான் ஆட்சி செய்து வருகின்றன. ஆனாலும் கூட, இந்தியாவிலேயே அதிக ஆணவக் கொலை நிகழும் மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது. தலித் மக்களுக்கு அனுதினமும் கொடுமைகள் இழைக்கக் கூடிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. சாதிய உணர்வுகளும், சாதிய அணிசேர்க்கையும் கொடி கட்டி பறக்கக் கூடிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றால், அரைநூற்றாண்டு கால ஆட்சியில் பெரியாரின் கொள்கைகள் கைவிடப்பட்டு உள்ளன என்று தான் சொல்ல வேண்டும். எனவே, தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவர் தூக்கிபிடித்திருக்கிற சமூக ஒற்றுமை, சாதிகளற்ற சமூகம், சமூக ஒடுக்குமுறை மற்றும் பெண் அடிமைத்தனத்தை முறியடிக்கும் உயர்ந்த நோக்கங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூக்கி பிடிப்பது மட்டுமல்லாமல், அந்த பாதையிலேயே தமிழகம் பயணிக்க வேண்டும் என அரைகூவி அழைக்கிறது. தந்தை பெரியாரின் கொள்கைகளை தமிழகத்தில் அமலாக்கவும், செயல்படுத்தவும் அனைவரும் திரண்டு வரவேண்டுமெனெ கேட்டுக் கொள்கிறேன்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
திமுக ஷாக்:
கடந்த 2021ம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது முதலே, இது திராவிட மாடல் அரசு, எல்லாருக்கும் எல்லாமும் மற்றும் பெரியாரின் வழியை பின்பற்றும் அரசு என சூளுரைத்து வருகிறது. ஆனால், ஆணவக் கொலைகள், கொலை, போதைப் பொருள் பயன்பாடு ஆகியவை திமுக ஆட்சியில் அதிகரித்து, சட்ட-ஒழுங்கு சிர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் ஆணவக் கொலைகள் ஓயவில்லை, தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் தொடர்கிறது என்ற குற்றச்சாட்டினை, திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே பேசியுள்ளது. இதில் ஆளும் கூட்டணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலையும் திமுக கூட்டணி:
ஆம்ஸ்ட்ராங்க கொலையின்போது, அரசியல் கட்சி தலைவர்களுக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினர். தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுகளால், திமுக மற்று விசிக கூட்டணியிலும் குழப்பாமான சூழல் ஏற்பட்டது. அதோடு, 2026 சட்டமன்ற தேர்தலில் விசிக 25 தொகுதிகளை கேட்கும் என, அக்கட்சியின் துணைபொதுச்செயலாளர் வன்னியரசு பேசியதும் பெரும் பேசுபொருளாகி, திமுகவை அதிருப்தியடைய செய்தது. இந்நிலையில் தான், திமுக ஆட்சியில் ஆணவக்கொலைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் தொடர்வதாக சிபிஎம் தெரிவித்துள்ளது. கூட்டணி கட்சிகளின் இந்த அதிரடி கருத்துகள், திமுகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக அமைந்து வருகின்றன.