(Source: ECI/ABP News/ABP Majha)
TN Corona Update | 8 சர்வதேச பயணிகள் உட்பட 610 பேருக்கு கொரோனா தொற்று... 10 பேர் உயிரிழப்பு
இன்று, வெளிநாட்டு விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் எட்டு பயணிகளிடம் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,44,037 ஆக அதிகரித்துள்ளது. இன்று, வெளிநாட்டு விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் எட்டு பயணிகளிடம் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில், ஆறு பேர் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அனைவரும் ஏழு நாட்கள் அவரவர் வீடுகளில் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு முன்னதாக தெரிவித்திருந்தது.
சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை: மாநிலத்தில், தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6708 ஆக குறைந்துள்ளது. இதில், தோராயமாக, 3ல் ஒருவர் சென்னை, கோயம்பத்தூர், ஆகிய இரண்டு மாவட்டங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களில் 389 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 1241 பேர் ஆக்சிஜன் உதவி கொண்ட படுக்கையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதாவது, பாதிக்கப்பட்டவர்களில் 24% பேருக்கு தீவிர நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இறப்பு எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில், கொரோனா தொற்று காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 36,735 ஆக அதிகரித்துள்ளது.
குணமடைவோர் எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில் 679 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,00,673 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 98.4% குணமடைந்துள்ளனர்.
கொரோனா தடுப்பூசி:
முன்னதாக , நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர், 15 - 18 வயதுடைய குழந்தைகளுக்கு 2022 ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்தார். இதன் மூலம், பெற்றோர்களுக்கு பள்ளி செல்லும் குழந்தைகள் குறித்த அச்சத்தை குறைக்கும் என்று தெரிவித்தார். மேலும் 2002 ஜனவரி 10ஆம் தேதி முதல், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் அறிவித்தார். இந்தியாவில் இது பூஸ்டர் தடுப்பூசி என்றில்லாமல் முன்னெச்சரிக்கை தடுப்பூசி என அழைக்கப்படும். இந்த முன்னெச்சரிக்கை தடுப்பூசியானது மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், 60 வயதுக்கு மேற்பட்ட, இணை நோயுடன் கூடிய முதியவர்களுக்கு, ஜனவரி 10ஆம் தேதி முதல் செலுத்தப்படும் என பிரதமர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில், ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12-பேர் இதுவரை குணமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 22-பேர் தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்