TNEB Bill | மின்சார கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்வது எப்படி?
மின்கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்து மின்வாரியத்திடம் தெரிவித்து மின் கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை உள்ளது. வீட்டிற்கே வரும் மின்வாரிய ஊழியர் மின்சார அளவை கணக்கிட்டு கட்ட வேண்டிய தொகை எவ்வளவு என தெரிவிப்பார். அல்லது தொகை விவரம் நமது மின்சார இணைப்பு எண்ணில் ஆன்லைனில் பதிவு செய்யப்படும். நாம் நேரடியாக மின்சார வாரியம் சென்றோ அல்லது குறிப்பிட்ட மின் எண்ணை பதிவிட்டு ஆன்லைன் மூலமாகவோ மின்சார கட்டணத்தை செலுத்தலாம்.
இந்நிலையில் தற்போது கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு அமலில் உள்ளதால் மின்சாரக் கட்டணத்தை குறிக்க ஊழியர்கள் வீடுகளுக்கு வரமுடியாத சூழல் உள்ளது. இதனால் பழைய மின் கட்டணத்தையே செலுத்தலாம் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால் இது மக்களிடையே சலசலப்பை உண்டாக்கியது. இதனால் அரசு தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்து மின்வாரியத்திடம் தெரிவித்து மின் கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
>> 5 நிமிட வேலைதான்.. ஏடிஎம் கார்டு சைஸ்ல ஆதார் அட்டை - எப்படி?
எப்படி?
மே மாதத்திற்கு மட்டும் பொதுமக்களே மின்கட்டணத்தை கணக்கீடு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள மின் மீட்டரில் உள்ள கணக்கை செல்ஃபோனில் புகைப்படம் எடுத்து மின்வாரிய உதவி பொறியாளரின் வாட்ஸ் அப் அல்லது இமெயிலுக்கு அனுப்பவேண்டும். மின் கணக்கின் புகைப்படத்தை அனுப்ப வேண்டிய மின் வாரிய உதவி பொறியாளரின் விவரம் விரைவில் www.tangedco.gov.in இணையதளத்தில் மண்டல வாரியாக பதிவேற்றம் செய்யப்படும். மின் எண்ணை குறிப்பிட்டு விவரங்களை எடுத்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
மின் கணக்கீட்டை கணக்கிட்டு மின்வாரிய அதிகாரிகள் கட்டணம் தொடர்பான அறிவிப்பை மீண்டும் வாட்ஸ்-ஆப்பிலோ அல்லது இமெயிலுக்கோ திருப்பி அனுப்புவார். அந்த குறிப்பிட்ட தொகையை பொதுமக்கள் ஆன்லைன் முறையில் செலுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதத்திற்கான மின் கட்டணம் ஏற்கெனவே கணக்கிடப்பட்டு பதிவிடப்பட்டிருந்தால் அதனை அதிகாரிகள் நீக்கிவிடுவார்கள். மேற்கொண்டு ஏதேனும் குளறுபடி, சந்தேகம் அல்லது குழப்பம் ஏற்பட்டால் மட்டும் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து மின்வாரிய அதிகாரி வீட்டிற்கே நேரில் வருவார் எனக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை மின்வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பொதுமக்களே மின் கட்டணத்தை கணக்கீடு செய்துகொள்ளலாம் என அரசு அறிவிப்பு வெளியிட்டாலும், செல்ஃபோன் வசதி, இண்டர்நெட் போன்ற வசதிகள் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? கொரோனா நேரத்தில் அவர்கள் மற்றவர்களின் உதவியை நாடிச்செல்வது சரியாக இருக்குமா? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
உங்க டிஜிட்டல் டேட்டா பாதுகாப்பா இருக்கணுமா? இந்த 5 விஷயங்களை கவனிங்க போதும்..