தவெக உடன் கூட்டணி! காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்.. ஓகே சொல்வாரா ராகுல்?
காங்கிரஸ் கூட்டம் ஒன்றில், “இந்த முறை திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்க வேண்டும். ஆட்சியிலும் பங்கு வேண்டும். எத்தனை நாட்களுக்குத் தான் நாம் இப்படியே இருக்க முடியும்”என்று பேசியதாக சொல்கின்றனர்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத்தேர்தலில் தவெக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலிடம் ரகசிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணி கணக்கு:
தமிழ் நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தை திமுக மற்றும் அதிமுக இப்போதே தொடங்கிவிட்டன. புதிதாய் அரசியல் கட்சி தொடங்கிய விஜயும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக, கட்சி தொடங்கிய பின் முதல் மாநாட்டிலேயே தங்களுடன் கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று அறிவித்தார் விஜய்.
இதனால் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தங்களுடன் கூட்டணிக்கு வரும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் இப்போது வரை அதே கூட்டணியில் தான் நீடிக்கிறது. அதேபோல், அதிமுக பாஜகவுடன் கூட்டணிவைத்துள்ளது. தேமுதிக மற்றும் பாமக இன்னும் தங்களது கூட்டணியை அறிவிக்காமல் இருக்கின்றனர்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை:
இச்சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற தவெக செயற்குழு கூட்டத்தில் திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் பாஜகவுக்கு எதிரான நிலைப்பட்டில் விஜய் தீவிரமாக இருக்கிறார் என்பதால் அவருடன் இணைவது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு டாக் எழுந்திருக்கிறது.
காங்கிரஸ் கூட்டணி:
இதனிடையே தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ அண்மையில் நடந்த காங்கிரஸ் கூட்டம் ஒன்றில், “இந்த முறை திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்க வேண்டும். ஆட்சியிலும் பங்கு வேண்டும். எத்தனை நாட்களுக்குத் தான் நாம் இப்படியே இருக்க முடியும்”என்று பேசியதாக சொல்கின்றனர்.
தவெக உடன் கூட்டணி?
முன்னதாக,காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் அண்மையில் சத்திய மூர்த்தி பவனில் நடத்திய காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்துடன் நாம் கூட்டணி வைக்க வேண்டும் என்று கோரிக்கையை வைத்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல், மும்பையில் கிரிஷ் ஷோடங்கரை சந்தித்த தவெக முக்கிய நிர்வாகி ஒருவர் தவெக உடன் கூட்டணி அமைத்தல் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு என்னவெல்லாம் பலன் இருக்கிறது என்பது பற்றி எடுத்துச்சொன்னதாகவும் சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். அதேபோல், காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலிடமும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இதே கோரிக்கையா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சி தமிழ் நாட்டில் அதல பாதாளத்தில் இருக்கிறது 2029 - நமக்கு நாடளுமன்ற தேர்தலில் வேலைசெய்ய கூட தொண்டர்கள் இருக்கமாட்டார்கள் எனவே அதிகாரப்பகிர்வு நமக்கு மிக முக்கியமான ஒன்று அதனால் தவெக உடன் கூட்டணி வைத்தால் இளைஞர்களிடம் நமது கட்சிக்கு ஒரு புத்துயிர் கிடைக்கும்.
கே.சி.வேணுகோபால் ஆர்டர்
அதேபோல், விஜய்க்கு கேரளாவிலும் கனிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள் அங்கு நடைபெறும் தேர்தலில் அவர்களது வாக்கை நாம் பெற முடியும் என்று அடிக்கியிருக்கிறார்களாம் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் இதையெல்லாம் பொறுமையாக கேட்ட கே.சி.வேணுகோபால் பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் ராகுல் மும்மரமாக இருக்கிறார் எதையும் அவசரப்பட்டு வெளியில் சொல்ல வேண்டாம் கொஞ்சம் அமைதியாக இருங்கள் ராகுலுடன் ஆலோசித்து ஒரு நல்ல முடிவு எடுப்போம் என்று சொன்னதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சு அடிப்படுகிறது.






















