கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகளை கண்டித்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஆர்ப்பாட்டம்
அமைச்சரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூரில் அமலாக்கத்துறை மற்றும் பாஜக அரசு, வருமான வரித்துறை அதிகாரிகளை கண்டித்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை மற்றும் கரூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக சென்னையில் நடைபெற்ற சோதனையின் போது அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அமைச்சருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஜவகர் பஜார் பகுதியில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ் நாடு கொங்கு இளைஞர் பேரவை மாவட்டச் செயலாளர் அருள் தலைமையில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோதமாக கைது செய்து சித்ரவதை செய்த பாஜக அரசு மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளை கண்டித்து அமைச்சரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வருமான வரித்துறை அதிகாரிகள் கோவை சாலையில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உணவகத்திற்கு சீல் வைத்ததை கண்டித்து அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.
அமலாக்கத்துறை சோதனையை தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர பெற்று வருகிறார். அமைச்சர் செந்தில்பாலாஜி பூரண குணமடைய வேண்டி வழக்கறிஞர் கோபால் என்பவர் தலைமையில் திமுகவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கரூர் பிரம்ம தீர்த்தம் சாலையில் உள்ள வராஹி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதையொட்டி வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்