மக்கள் இயக்கத்திற்கு ஆதரவு...மக்கள் இயக்கத்திற்கு தடை.. விஜய் முடிவு குழப்புதா? இதோ தெளிவான தகவல்!
ஊடகங்கள் சரியான பெயரை கையாளாமல் போனதும், இந்த குழப்பத்திற்கு காரணம். இனியாவது இதில் தெளிவு பிறக்கப்பட்டும்.

விஜய் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. விஜய் ஆசி வழங்கி அனுமதி வழங்கினார். இது ஒரு செய்தி. விஜய் மக்கள் இயக்கம் கூட்டம் நடத்தவும், தன் பெயரை பயன்படுத்தவும் தடை விதிக்க வேண்டும் என்று அதே விஜய் வழக்கு தொடர்ந்தார். இது ஒரு செய்தி. இதை மேலோட்டமாக படிக்கும் போது குழப்பம் இருக்கும். ஆனால் உண்மையில் பெயரில் இருக்கிறது ட்விஸ்ட். அது வேறு இயக்கம். இது வேறு இயக்கம். அது என்ன இயக்கம்... ஏன் இந்த குழப்பம் என்பதை தெளிவாக பார்க்கலாம்.
விஜய்-எஸ்ஏசி விரிசல்!
நடிகர் விஜய்யின் ஆரம்ப கால சினிமா கட்டமைப்பு முழுதும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மூலமே கட்டமைக்கப்பட்டது. என்ன படத்தில் நடிக்க வேண்டும், என்ன கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும், என்ன பெயரில் நடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்திலும் எஸ்ஏசி தலையீடு இருந்ததை யாரும் மறுக்க முடியாது. சந்திரசேகர் சொல்லும் சேதி தான், விஜய்க்கு தெய்வ வாக்காகவும் இருந்தது. ஆனால் எதுவும் சில காலம் என்பது போல் தான் நடிகர் விஜய்-எஸ்ஏசி இடையேயான உறவில் ஏற்பட்ட உரசலும். குடும்பத்தில் ஏற்பட்ட கசப்புகள், எஸ்ஏசியை விஜய் ஓரம்கட்டும் அளவுக்கு பிரிவானது. அதுவரை இளைய தளபதி விஜய் இயக்கமாக இருந்த அமைப்பு, தளபதி என்கிற பட்டத்தை விஜய் ஏற்றதும், தளபதி விஜய் மக்கள் இயக்கமாக மாறியது.
எஸ்ஏசி தொடங்கிய இயக்கம்!
இந்த நிலையில் தான் நடிகர் விஜய் பெயரில் ‛அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்கிற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை எஸ்ஏசி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, அதற்கான அமைப்பையும் உருவாக்கினார். அதன் பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகரும், செயலாளராக விஜய்யின் அம்மா ஷோபாவும், தலைவராக விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த திருச்சி ஆர்.கே.ராஜா என்பவரும் நியமனம் செய்யப்பட்டனர். இந்த அறிவிப்பு வெளியானதுமே, நடிகர் விஜய் தரப்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், தனது ரசிகர்கள் யாரும் தனது தந்தை தொடங்கியுள்ள கட்சியில் பணியாற்ற வேண்டாம் என்றும், அதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அறிவித்தார்.
விஜய் தொடங்கிய இயக்கம்!
விஜய்யின் இந்த அறிவிப்பை தொடர்ந்து செயலாளர் பொறுப்பில் இருந்து ஷோபா ராஜினாமா செய்தார். அடுத்த சில மணி நேரத்தில் கட்சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்ட திருச்சி ஆர்.கே.ராஜாவும் ராஜினாமா செய்தார். கட்சியின் தலைவர், செயலாளர் இருவரும் ராஜினாமா செய்த நிலையில், செய்வதறியாது தவித்தார் எஸ்ஏசி. அதன் பின் விஜய் ரசிகர்கள் யாரும் எஸ்ஏசி பக்கம் திரும்பவே இல்லை. இதற்கிடையில் தனது ரசிகர் இயக்கத்திற்கு ‛தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்கிற பெயரை சூட்டி, அதன் மூலம் வழக்கமான பணிகளை விஜய் கவனிக்கத் தொடங்கினார். அதன் பின் அந்த பிரச்சனை ஓய்ந்தது. இந்நிலையில் தான், நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்க விரும்பினார். அதற்காக அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பினார்.
விஜய்க்கு வந்த ஐடியா!
இந்த நேரத்தில் தான், எஸ்ஏசியின் ‛அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ குறித்து விஜய்க்கு சிலர் அலர்ட் செய்துள்ளனர். அந்த கட்சியின் நிலை என்ன என்று தெரியாத நிலையில், நாம் கட்சியில் இறங்கும் போது, அதே பெயரில் இன்னொருவர் வந்தால், வாக்காளர்கள் குழம்புவார்கள் என்று கூறினர். அதன் பிறகு தான், அந்த விவகாரத்தை சட்டரீதியாக தீர்க்க விஜய் முடிவு செய்தார். உடனே நீதிமன்றத்தில் விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ‛தனது பெயரை பயன்படுத்தி எஸ்ஏசி எந்த கூட்டமும் நடத்தக்கூடாது, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்கிற கட்சியின் கூட்டங்கள் நடத்த தடை விதிக்க வேண்டும்,’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் முன்வைக்கப்பட்டன.
இது தான் மக்கள் இயக்கம்!
அந்த வழக்கு தொடர்பான விசாரணையில் தான், ‛அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ பிப்ரவரி மாதம் கலைக்கப்பட்டதாக,’ எஸ்ஏசி தரப்பில் நீதிமன்றத்தில் இன்று பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்கிற கட்சி கலைக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜய் ஆதரவு பெற்ற தளபதி விஜய் மக்கள் இயக்கம் வழக்கம் போல செயல்படும், அது விஜய் கட்டுப்பாட்டில் இருக்கும். இதிலிருந்து விஜய் மக்கள் இயக்கம் தொடர்பான ஒரு தெளிவு பிறந்திருக்கிறது. அஇதவிகஇ(அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்) இப்போது இல்லை. ‛அஇ’(அகில இந்திய) என்கிற வார்த்தையை தூக்கிவிட்டால், அது தான் தவிமஇ(தளபதி விஜய் மக்கள் இயக்கம்). ஊடகங்கள் சரியான பெயரை கையாளாமல் போனதும், இந்த குழப்பத்திற்கு காரணம். இனியாவது இதில் தெளிவு பிறக்கப்பட்டும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

