(Source: ECI/ABP News/ABP Majha)
Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் நாளை படத்திறப்பு நினைவேந்தல் - தேமுதிக அறிவிப்பு
நடிகர் சங்க முன்னாள் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார்
நடிகர் சங்க முன்னாள் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மரணம் திரைத்துறை, அரசியல் தளம் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இவரது உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது. மறைந்த விஜயகாந்தின் உடல் அவரது கட்சி அலுவலகத்தில் புதைக்கப்பட்டது. இந்நிலையில், தேமுதிக தரப்பில் இன்று அதாவது ஜனவரி 23ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், வரும் 24ஆம் தேதி அதாவது நாளை விஜயகாந்த்தின் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தேமுதிக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், புரட்சிக்கலைஞர் கேப்டன் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 24.01.2024 புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள்,உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு சிறப்பு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜயகாந்தின் மகன்களான சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் இருவரும் கலந்து கொண்டனர். திரைத்துறை சார்பிலும் பல்வேறு முக்கிய நபர்களும் நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்தின் மூத்த மகன், கண்ணீர் மல்க பேசியது சுற்றியிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. பலரும் சில நிமிடங்கள் விஜயகாந்தை நினைத்து கண் கலங்கினர். அவர் தனது பேச்சின்போது, “ எந்த நடிகர் சங்க நிகழ்ச்சியிலும் நானும் சண்முக பாண்டியனும் கலந்து கொண்டதில்லை. எங்களுடைய முதல் நிகழ்ச்சியே இப்படி ஒரு நிகழ்வாக மாறிப் போனது மனதுக்கு கஷ்டமா இருக்கு. அதேபோல் அப்பா இல்லாமல் பேசும் முதல் நிகழ்ச்சியும் இதுதான். அதை எப்படி சொல்ல வேண்டும் என தெரியவில்லை. எனது அப்பா விஜயகாந்த் சிறு வயதில் இருந்தே எங்களை கொடுத்து கொடுத்து தான் பழக்கி இருக்கிறார். அது தான் என்னைக்கும் இருக்கு. நிறைய பேர் இன்னைக்கு கேப்டன் இல்ல. என்ன நடக்க போகுதோ என நினைக்கிறார்கள். எங்கப்பா உங்களுக்காக தான் எங்களை விட்டு விட்டு சென்று இருக்கிறார். அவரின் கனவை நிறைவேற்ற தான் விஜய பிரபாகரனும் சண்முக பாண்டியனும் இருக்கோம்.
ரொம்ப பெருமையா இதை சொல்வேன். காரணம், ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் எல்லாரும் வீட்டில் உறுதிமொழி எடுப்பிங்க. 2023ல என் பிறந்த நாளை முன்னிட்டு, அம்மாவுக்கு பொதுச்செயலாளர் பதவி கொடுக்கும் போதும் சரி நான் அப்பாவிடம் சில வாக்குறுதிகள் கொடுத்தேன்.அதை 2024ல் நிறைவேற்றுவேன். அது என்ன என்பதை இப்ப சொல்ல முடியாது. காலம் அதுக்கான பதிலை சொல்லும். கடந்த 10 வருஷமா கேப்டன் உடல்நிலை சரியில்லாமல் எவ்வளவோ கஷ்டப்பட்டார். வேறு யாராக இருந்தாலும் இப்படி தாங்கி இருப்பார்களா என தெரியவில்லை. நான் ஒவ்வொரு மீட்டிங்கில் சொன்னேன். குகைக்கில் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான். இந்த 71 வயது வரையிலும் விஜயகாந்த் கஷ்டப்பட்டு நின்னாருன்னா அது அவரின் மன தைரியம் மட்டும் தான்.
விஜயகாந்துக்கு நினைவு இல்லை என நிறைய யூடியூப் சேனல்களில் தப்பு தப்பா சொல்றீங்க அதெல்லாம் பொய். அப்பா இறப்பதற்கு 2 நாட்கள் முன்னாடியும் வீட்டில் வேலை செய்த 2 பணியாளர்களிடம் தான் நடிச்ச எல்லா படத்தோட பாட்டையும் போட சொல்லி கேட்டு ரசித்து கொண்டிருந்தார். இது எனக்கே தெரியாது. அந்த 2 அண்ணன்கள் சொல்ல போய் தான் தெரியும். உடனே நான் சிசிடிவி பாக்குறப்ப அப்பா அந்த பாட்டை கேட்டு என்ஜாய் பண்ணி தாளம் போட்டு கொண்டு இருந்தார்.
டிசம்பர் 26 ஆம் தேதி அவரை மருத்துமனையில் சேர்த்தோம். எப்போதும் வந்து விடுவார் என நினைத்தோம்.ஆனால் அவர் வரவில்லை. கேப்டன் சொன்ன மாதிரி தான், " இந்த விஜயகாந்த் மக்களுக்காக தான் வாழ்ந்தான், வாழ்வான், வாழ்ந்து கொண்டே இருப்பான்" என்பதை கூறி விடை பெறுகிறேன். அப்பாவின் மறைவுக்கு வந்த அனைவருக்கும், இந்த நிகழ்வை நடத்தும் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவரின் மறைவுக்கு வர முடியாமல் போனவர்களின் நிலையை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். எங்களுக்கு யார் மேலும் எந்த வருத்தமும் இல்லை. கோபமும் இல்லை என தெரிவித்து கொள்கிறேன்” என கூறினார்.