கோவை : முதலமைச்சர் வரவேற்பில் கட் அவுட், பேனர்கள் தவிர்ப்பு ; முதலமைச்சர் படம் இல்லாத அரசு நிகழ்ச்சி..!
கோவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பேனர்கள் வைக்கப்படாததற்கும், அரசு நிகழ்ச்சிக்கான பேனரில் முதல்வர் புகைப்படம் இடம்பெறாததற்கும் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் பயணமாக இன்று கோவைக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வருகை தந்த அவருக்கு, கோவை விமான நிலையத்தில் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி, கோவையில் 4 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 441.76 கோடி ரூபாய் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை 23 ஆயிரத்து 534 பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். 89.73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள 128 பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார். பல்வேறு அரசு துறைகள் சார்பில் 596.02 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக 67 திட்ட பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்ட உள்ளார். இன்று மாலை திருப்பூரில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
இதனிடையே வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தரும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கோவை - அவிநாசி சாலையில் திரண்டு இருந்த திமுக தொண்டர்கள் வரவேற்பு அளிக்க உள்ளனர். அதேசமயம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, கோவை - அவிநாசி சாலையில் கட் அவுட், பேனர்கள் எதுவும் வைக்கப்படவில்லை. முதலமைச்சரை வரவேற்று ஆங்காங்கே போஸ்டர்கள் மட்டுமே ஒட்டப்பட்டுள்ளன.
வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சி மேடையில் உள்ள பேனரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் கூட இடம் பெறவில்லை. தமிழ்நாடு அரசின் சின்னமும், முதலமைச்சர் பெயர் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. அதேபோல கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுக மற்றும் பாஜக சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோருக்கும் முன் வரிசையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வருகை டிவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது. முதலமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ’கோ பேக் ஸ்டாலின்’ என்ற ஹேஸ்டேக்கும், அவரை வரவேற்று ‘கோவை வெல்கம் ஸ்டாலின்’ என்ற ஹேஸ்டேக்கும் டிரெண்டாகியுள்ளது. டிவிட்டர் டிரெண்டிங்கில் இந்திய அளவில் ’கோ பேக் ஸ்டாலின்’ முதலிடத்தையும், ‘கோவை வெல்கம் ஸ்டாலின்’ இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொது மக்கள் அழைத்து வரபப்ட்டுள்ளன. தனியார் கல்லூரி மற்றும் பள்ளி பேருந்துகள் மூலமாக இந்நிகழ்ச்சிக்கு பொது மக்கள் அழைத்து வரப்பட்டுள்ளன. முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு கோவை மாநகர பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் மாநகர பகுதிக்கு வர தடை விதித்து காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர். முதலமைச்சர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். ஆனால், கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கேற்றுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

