CM Stalin: வறுமையால் வாடும் மாணவனுக்கு உதவிக்கரம் நீட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்!
வறுமையால் உயர்கல்வி படிக்க சிரமப்பட்ட மாணவரின் கல்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதவுவதாக ட்வீட் செய்துள்ளார்.
கால்நடை மருத்துவபடிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் நேற்று அதாவது ஜூலை மாதம் 26ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 200-க்கு 200 என முழுமையான கட்-ஆப் மதிப்பெண்ணை 33 மாணவ-மாணவிகள் தமிழ்நாடு முழுவதும் பெற்றனர்.
அதில் குறிப்பாக, அரியலூரை சேர்ந்த ராகுல்காந்த், நந்தினி, வசந்தி, சக்திகுமரன் ஆகியோர் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்து அம்மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து உள்ளனர். இதில், தரவரிசைபட்டியலில் அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தை சேர்ந்த ராகுல்காந்த் (வயது 18) என்ற மாணவர் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
இவருக்கு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உட்பட அப்பகுதி மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு அளவில் முதல் இடம் பிடித்துள்ள ராகுல் காந்துக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் முதல் இடம் பிடித்த மாணவனான ராகுல் காந்தை செய்தியாளர்கள் சந்துத்தனர்.
அப்போது அவர், ”எனது தந்தை முருகேசன் சைக்கிள் பழுது பார்க்கும் கடையை நடத்தி வருகிறார். தாயார் தேவகி. எனது சகோதரி டயானா இளங்கலை படிப்பை முடித்துவிட்டு முதுகலைப் படிப்பதற்கு விண்ணப்பித்துள்ளார். நான் கடந்த ஆண்டு நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 588 மதிப்பெண்களை பெற்றுள்ளேன். கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய 4 பாடங்களில் முழு மதிப்பெண் அதாவது 100 மதிப்பெண்களை பெற்றுள்ளேன். இதையடுத்து பொறியியல் மற்றும் கால்நடை இளநிலை மருத்துவத்திற்கு விண்ணப்பித்திருந்தேன். கால்நடை இளநிலை மருத்துவத்திற்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மருத்துவராவது தான் கனவு என்றாலும் நீட் தேர்வுக்கு கோச்சிங் செல்ல பணம் இல்லாததால், கால்நடை மருத்துவம் சென்னையில் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். வறுமையில் உள்ள எனக்கு தமிழ்நாடு அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் உதவி செய்தால் நான் எனது கால்நடை படிப்பை மிகச்சிறப்பாக படித்து அரசு கால்நடை மருத்துவமனையில் பணியில் சேர்ந்து, கிராமப்புறங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிப்பேன்” என தெரிவித்திருந்தார்.
இந்த செய்தி ஊடகங்களில் வெளியாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாணவர் ராகுல் காந்துக்கு கல்வி மீதான ஆர்வமும் அவரது உழைப்பும் போற்றத்தக்கது. அவரை நான் பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்! கல்வியின் முக்கியத்துவத்தை நான் ஒவ்வொரு முறை வலியுறுத்திப் பேசுவதும், நம்முடைய NEET எதிர்ப்பு என்பதும் ராகுல் காந்த் போன்ற மாணவர்களின் வெற்றிக்காகத்தான்! அவருக்கு உதவ நமது அரசு இருக்கிறது. படிப்பு மட்டுமே நம்முடைய சொத்து! நிலையான புகழ்! தடைகளைக் கடந்து படிப்போம்! படிப்பால் பெருமையடைவோம்! ராகுல் காந்த்தின் பெற்றோருக்குப் பாராட்டுகள்!” என குறிப்பிட்டுள்ளார்.