MK Stalin: அஜித்குமார் மரண வழக்கில் உடனடி நடவடிக்கை; மேலதிகாரி மீதும் எடுக்கப்பட்டதாக முதல்வர் பேட்டி
சிவகங்கை காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, உயரதிகாரி மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், ஓரணியில் தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட திமுக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், சிவகங்கை காவலாளி அஜித்குமார் மரண வழக்கில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“அஜித்குமார் மரண வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை“
சென்னையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், சிவகங்கை காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, தகவல் தெரிந்த உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கைது நடவடிக்கையும் மேற்கொண்டதோடு, இன்று கூட மேலதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்கும் மத்திய அரசு“
மத்திய அரசு, அரசியல், பண்பாடு, மொழி, பொருளாதாரம் என அனைத்திலும் தமிழ்நாட்டிற்கு எதிராகவே செயல்படுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
அனைத்திலும் வளர்ந்த தமிழ்நாட்டை, பல்வேறு வழிகளில் மத்திய அரசு புறக்கணித்து வருவதாகவும், தமிழ்நாட்டிலிருந்து வசூலிக்கும் வரியை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தருவதில்லை என்றும், ஜிஎஸ்டி மூலம் அது புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உரிய நிதியை கொடுப்பதில்லை என்றும், தமிழ்நாட்டிற்கு சிறப்புத் திட்டங்களும் இல்லை என அவர் விளக்கினார். பள்ளிக்கல்விக்கான நிதி வெறும் 113 கோடி ரூபாயும், சமஸ்கிருதத்திற்கு 2,532 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார்.
தமிழர்களுடைய வரலாற்றுப் பெருமையை சொல்லக்கூடிய கீழடி அறிக்கையை வெளியிடாமல், திட்டமிட்டு மறைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, மத்திய அரசு மீது குற்றம்சாட்டினார்.
“நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி“
பல்வேறு பிரச்னைகள் குறித்து தொடர்ந்து பேசுவதால் தான், தொகுதி மறுவரையறை என்ற பெயரில், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.
“ஓரணியில் தமிழ்நாடு எதற்காக.?“
பாஜகவின் அரசியல் படையெடுப்பை, பண்பாட்டு படையெடுப்பை, தமிழ்நாட்டின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் பொருளாதாக போரை எதிர்கொள்ள, நெஞ்சுரம் மிக்க அரசியல் சக்தி தேவை என்பதால் தான், ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரையை ஒரு இயக்கமாகவே தொடங்கி நடத்த இருப்பதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த பரப்புரையின்போது, மத்திய அரசால் தமிழ்நாடு எவ்வாறெல்லாம் வஞ்சிக்கப்படுகிறது என்பதையும், திமுக அரசின் சாதனைகளையும் பட்டியலிட்டு, மக்களிடம் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.
இது திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான நிகழ்வு மட்டுமல்ல என்றும், அதோடு சேர்த்து, தேர்தலுக்கான பரப்புரையாகவும் இதை முன்னெடுத்துள்ளதாக மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.
“திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள்“
தொடர்ந்து பேசிய மு.க. ஸ்டாலின், தற்போதுள்ள சூழலில், திமுக கூட்டணியில் சேர மேலும் பல கட்சிகள் வரும் வாய்ப்புகள் உள்ளதாகவும், அப்படி வரும் நேரத்தில் உள்ள சூழலை பொறுத்து முடிவுகளை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.





















