CM Stalin: "கனவு மட்டுமல்ல; நனவாகப் போகும் கனவு" - தமிழ்நாடு பட்ஜெட் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!
பட்ஜெட் நிதியை மட்டுமின்றி சமூக நீதியை அடிப்படையாக கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
![CM Stalin: CM Stalin says budget has been prepared on the basis of social justice and not just budget funds CM Stalin:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/19/ddf74ce696a800fcd531757b1580e12a1708334690970102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த நிலையில், தாக்கலான பட்ஜெட் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
"சமூக நீதியை அடிப்படையாக கொண்டு பட்ஜெட்"
அதில், "தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கித் தமிழ்நாடு சீர்மிகு பயணத்தை நடத்தி வருகிறது. இதனை எடுத்துச் சொல்லும் அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்றைய தினம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்கள். பொதுவாக நிதிநிலை அறிக்கைகள் நிதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும். இது நீதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
அதுவும் சமூகநீதியை மையமாகக் கொண்டு தயாரான இந்த அறிக்கை, அனைத்து மக்களுக்குமான சமநீதியையும் - சமநிதியையும் வழங்கித் தமிழ்நாட்டின் சீரான வளர்ச்சிக்கான பாதைக்கு அதிவேகப் பயணத்தை உறுதி செய்துள்ளது. ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசானது எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிடவியல் கோட்பாட்டின் அரசு நிர்வாக வடிவமாகச் செயல்பட்டு வருகிறது. இந்தச் செயல்பாட்டின் பயனை நாம் அனைவரும் உடனடியாகவும், நேரடியாகவும் கண்டு வருகிறோம்.
இந்தியாவின் பொருளாதாரத்துக்கு 9 விழுக்காடு பங்கைத் தருவதாகத் தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளமாக இருக்கிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி 8.19 விழுக்காடாக இருக்கிறது. மாநிலத்தின் பணவீக்கமானது 5.97 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-ஆவது இடத்தில் இருந்து 3-ஆவது இடத்துக்குத் தமிழ்நாட்டை உயர்த்தி இருக்கிறோம்.புத்தாக்கத் தொழில்கள் வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. இப்படி அனைத்துத் துறையிலும் முன்னேறி வரும் மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது.
"கடைக்கோடி மனிதரையும் மேம்படுத்தும் பட்ஜெட்"
இது சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் உயர்த்தி வருகிறது. அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்துச் சமூக வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி என்பதே திராவிட மாடல் வளர்ச்சியின் இலக்குகளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். இந்த வளர்ச்சியின் அடுத்தகட்ட உயர்வை அடையாளம் காட்டுவதாக தமிழ்நாடு அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அமைந்திருப்பதை உணர்ந்து மகிழ்கிறேன்.
நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டின் பெருங்கனவுகளை மாபெரும் இலக்காகக் கொண்டுள்ளது. சமூகநீதி - கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு - உலகை வெல்லும் இளைய தமிழகம் - அறிவுசார் பொருளாதாரம் - சமத்துவ நோக்கில் மகளிர் நலம்- பசுமைவழிப் பயணம் - தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய ஏழு இலக்குகளைக் கொண்டதாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.
கடைக்கோடி மனிதரையும் மேம்படுத்தி, இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை உச்சிக்குக் கொண்டு போய் உட்கார வைப்பதாக இதன் ஒவ்வொரு அறிவிப்பும் அமைந்துள்ளன. நமது கையில் இருக்கும் வளத்தை, தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைக்குப் பயன்படுத்துவதாக இந்த அறிக்கையை வடிவமைத்துள்ளோம்.
"கனவு மட்டுமல்ல நனவாகப் போகும் கனவு"
ஏழு பெரும் கனவுகளையும் முழுமையாக நிறைவேற்றும்போது தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த மாநிலமாக, தலைசிறந்த மாநிலமாகத் திகழும் காலம் விரைந்து ஏற்படும். தலைசிறந்த - தொலைநோக்குப் பார்வை கொண்ட - கனிவான - பொருளாதாரச் சமநிலை அறிக்கையைத் தயாரித்து வழங்கிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை பாராட்டுகிறேன்.
திராவிட மாடல் அரசுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கும் மாபெரும் கடமையை மிகச் சரியாக ஆற்றி இருக்கிறார் அமைச்சர். நிதித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
திராவிட மாடல் ஆட்சி உருவானபோது, “இந்த ஆட்சியானது ஒரு விவசாயிக்கு மழையாகவும், ஒரு ஏழைக்கு ஒரு கவளம் சோறாகவும், ஒரு ஊழியருக்கு மாதத்தின் முதல் நாளாகவும், ஒரு தொழிலதிபருக்கு வளர்ச்சியின் குறியீடாகவும் செயல்படும்” என்று நான் குறிப்பிட்டேன். அப்படித்தான் கழக அரசு செயல்பட்டு வருகிறது.
இனியும் அப்படித்தான் செயல்படும் என்பதை நாட்டுக்குச் சொல்லும் அறிக்கைதான் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை. இவை நமது அரசின் கனவுகள் மட்டுமல்ல, நனவாகப் போகும் கனவுகள். நாளை முதல் அனைத்தும் நனவாகும். துறைசார்ந்த அமைச்சர்களும், துறையின் செயலாளர்களும் இந்தத் திட்டங்கள் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டனவோ அதனை மனதில் வைத்துச் சிறப்பாகச் செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)