தமிழ்நாட்டிற்கே நான் முதலமைச்சராக இருந்தாலும் கொளத்தூருக்கு எம்எல்ஏதான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தமிழ்நாட்டிற்கே நான் முதலமைச்சராக இருந்தாலும், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு நான் எம்.எல்.ஏ.,தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
கொளத்தூர் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அதனை தொடர்ந்து சிறப்புரையாற்றிய அவர், “உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம். எவ்வளவு பணி இருந்தாலும், கொளத்தூர் தொகுதிக்கு வந்து, உங்கள் முகத்தையெல்லாம் பார்த்தால்தான், எனக்குப் புது எனர்ஜியே ஏற்படுகிறது. தமிழ்நாட்டிற்கே நான் முதலமைச்சர். ஆனால், உங்களுக்கு நான் சட்டமன்ற உறுப்பினர். உங்களுடைய அன்பால்தான், உங்களுடைய பேரன்பால்தான். உங்களுடைய வாழ்த்துகளோடுதான் நான் ஹாட்ரிக் வெற்றி பெற்றேன். மூன்றுமுறை தொடர்ந்து எம்.எல்.ஏ-வாக என்னை இந்த தொகுதியில் நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள். நீங்கள் எல்லாம் என்னை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுத்த காரணத்தால்தான் இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக இருக்கிறேன். அதனால், நீங்கள் உரிமையோடு கேட்பதை நிறைவேற்றுகின்ற பொறுப்பு எனக்கு உண்டு. கூடுதல் பொறுப்பு உண்டு.
இந்த அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை, கடந்த 2.11.2021 அன்று நான் தொடங்கி வைத்தேன். இது தொடங்கிய இரண்டே ஆண்டுகளில், 685 மாணவ மாணவிகள் இந்தக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவே, இந்தக் கல்லூரி எவ்வளவு நன்றாக செயல்படுகிறது என்று புரிந்து கொள்ளலாம். நன்றாக சொல்லி தருவதால்தான், பெற்றோர்களும் தேடி வந்து, உங்களை இங்கே சேர்த்திருக்கிறார்கள். முதல் வருடம் 240 பேர் சேர்ந்தார்கள். அடுத்த வருடம் மாணவர்களுடைய எண்ணிக்கை 480 ஆனது. இப்போது 685, ஆனால், அட்மிஷன் கேட்டு வருகின்ற விண்ணப்பங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறது. இதுதான் இந்தக் கல்லூரியுடைய வெற்றி. மிகப் பெரிய வெற்றி. இந்த வெற்றியில் பெரும்பங்கு யாருக்கு என்று கேட்டீர்கள் என்றால், நம்முடைய மாண்புமிகு அமைச்சர் சேகர் பாபு அவர்களுக்கு தான்.
ஏனென்றால், கடந்த 2021-ஆம் ஆண்டு, இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 10 கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவித்து, அதில் ஒன்றாக இந்தக் கல்லூரி அமைவதற்கு காரணமாக இருந்தவர் நம்முடைய சேகர்பாபு அவர்கள். இப்படி ஒவ்வொரு காரியத்தையும், பார்த்து பார்த்து செய்கின்ற காரணத்தால்தான் அதுவும் பார்த்து, பார்த்து வெற்றியடையக்கூடிய அளவுக்கு செய்கின்ற காரணத்தினால்தான். அவரை நான் எப்போதும் சேகர்பாபு என்று சொல்லாமல் செயல்பாபு என்று சொல்வதுண்டு.
அவர் மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர். ஃபோன் எடுத்து ரிங்டோன் கேட்டாலே தெரியும். ஐயப்பன் பாட்டுதான் வரும். அதனால் கல்விக்கான கடவுளையும் வணங்குகிறவர். கல்வியே கடவுள் என்று தன்னோட பணியை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறார்.
அறநிலையத்துறை மூலம், இன்னும் பல அறம் நிறைந்த செயல்களை அவர் செய்யவேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன். அவருக்கும், இந்தக் கல்லூரி நிர்வாகத்திற்கும், உதவிப் பேராசிரியர்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்தக் கல்லூரியில் சேர்ந்த மாணவ - மாணவிகளுக்கு கல்விக் கட்டணமும் உபகரணங்களோடு கூடிய புத்தகப்பையும் நான் வழங்கினேன். கல்வி
இன்றைக்கு புதிதாக சேர்ந்திருக்கின்ற பேட்ச் வந்திருக்கிறீர்கள். அந்த மாணவர்களுக்கும் வழங்குகிறேன். இப்படி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், மாணவர்களான உங்களை சந்திப்பதும் உங்களிடம் பேசுவதும், அதுதான் என்னை எப்போதும் ஆக்டிவ்வாக வைத்துக் கொள்கிறது. அதுதான் உண்மை. நான் சொன்னேன். வயது 70. ஆனால், 20 வயது போல இப்போது நிற்கிறேன். அதற்கு காரணம் நீங்கள்தான். நீங்களும் படிப்பில் ஆக்டிவ்வாக இருக்கிறீர்கள் இருக்கவேண்டும். இதுதான் என்னுடைய வேண்டுகோள். இந்த படிப்பு நமக்கு சுலபமாக கிடைத்துவிடவில்லை. எத்தனையோ போராட்டத்திற்கு பிறகு நமக்கு இந்தப் படிப்பு கிடைத்திருக்கிறது. இந்தக் கல்விதான் நாம் மட்டுமில்லை. நம்முடைய தலைமுறையே முன்னேறுவதற்கான இது அச்சாரமாக அமைந்திருக்கிறது. அதனால்தான், நீங்கள் நன்றாக படிக்க வேண்டுமென்று நம்முடைய திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும், குறிப்பாக, பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.
பசியில் வாடாமல் இருப்பதற்குதான், காலையில் பள்ளிக்கு வந்தவுடன், காலை உணவுத் திட்டம். மாணவிகள், பள்ளிகளுக்கு - கல்லூரிகளுக்கு வேலைகளுக்குப் செல்ல, நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம். உங்களில் பல பேர் இந்தப் பயணத்தால், மாதம் கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்தி, அதை கல்விச் செலவுகளுக்குப் பயன்படுத்தி இருப்பீர்கள் என்று நான் மனதார நம்புகிறேன்.
படிக்கும்போது பாடத்திட்டத்தை தாண்டி, உங்கள் திறமையை வளர்த்து கொள்ள வேண்டுமென்பதற்காகதான் 'நான் முதல்வன்' என்கிற ஒரு அற்புதமான திட்டம். அரசுப் பள்ளியில் படித்துவிட்டு கல்லூரிகளில் சேருகின்ற மாணவிகளுக்கு, புதுமைப்பெண்' என்ற திட்டத்தின் மூலம், மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
இன்றைக்கு இரண்டு நாட்களாக நீங்கள் பத்திரிகைகளிலும் பார்த்திருப்பீர்கள், தொலைக்காட்சியிலும் பார்ந்திருப்பிர்கள். படிப்பதற்காகவும், வேலை பார்ப்பதற்காகவும், வெளியூர் செல்ல வேண்டும் என்றால், பெண்கள் பாதுகாப்பாக தங்கி கொள்ள வாதியாக இப்போது தோழி விடுதிகள்' என்று விடுதி ஆரம்பித்திருக்கிறோம். குடும்பத் தலைவிகளாக இருக்கின்ற உங்கள் அம்மா மற்றும் சகோதரிகளுக்கு வருகிற செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளிலிருந்து மாதந்தோறும் 1000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அதையும் வழங்கப் போகிறோம்.
இப்படி ஒவ்வொரு கட்டமாக பார்த்து, பார்த்து திட்டங்கள் தீட்டி உதவி செய்து கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் பயன்படுத்திகொண்டு நீங்கள் எல்லோரும் நன்றாக படிக்க வேண்டும். இன்னும் சில ஆண்டுகள் கடந்து, எங்கேயாவது ஒரு இடத்தில், ஏதாவது ஒரு சூழ்நிலையில், ஏதாவது ஒரு தருணத்தில் என்னை நீங்கள் சந்திக்கும்போது, உயரமான பதவிகளில் இருக்கிறோம். இவ்வளவு பெரிய ஆளாகிவிட்டோம்" என்று பெருமையோடு சொல்லும் அளவுக்கு அந்த சூழ்நிலை ஏற்பட்டால் அதைவிட மகிழ்ச்சி வேறு எதுவும் எனக்கு இருக்க முடியாது என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இதைத்தான் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கண்ட கனவுகள் அவர்கள் கண்ட கனவு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நிறைவேற்றுகிறான் என்பதில் எனக்கு பெருமை. இதைவிட பெருமை எனக்கு வந்து சேரமுடியாது.
நீங்கள் பெருமை அடைவது ஒரு பக்கம் இருந்தாலும், எனக்கு அதைவிட முக்கியம் எது என்று கேட்டால், நீங்கள் படித்து உங்கள் பெற்றோரை பெருமை அடைய வைக்கவேண்டும்! இந்த தாய்த் தமிழ்நாட்டை பெருமை அடைய வைப்பதற்கு கல்விதான்! கல்வியை யாராலும் திருடவே முடியாது. அதுதான் நிலையான சொத்து. நீங்கள் எல்லோரும் நன்றாக படியுங்கள் என்ற வேண்டுகோளை மட்டும் இந்த நேரத்தில் வைத்து, சாதிக்க முடியாத சாதனைகளை எல்லாம் நீங்கள் சாதித்து காட்டவேண்டும் என்ற அந்த வேண்டுகோளையும் வைத்து, இப்படிபட்ட ஒரு சிறப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் தொடக்கத்தில் சொன்னதுபோல, ஒரு எனர்ஜி மட்டுமல்ல, இன்னும் பல பணிகளை ஆற்றவேண்டும் என்ற அந்த உந்துதலையும் இந்த நிகழ்ச்சி எனக்கு
வழங்கிக்கொண்டு இருக்கிறது. இப்படிபட்ட நிகழ்ச்சியில் உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த நிகழ்ச்சியை மிகுந்த எழுச்சியோடு ஒரு பாச உணர்வோடு, ஏற்பாடு செய்திருக்கின்ற இந்துசமய அறநிலையத் துறைக்கும், குறிப்பாக நம்முடைய அமைச்சர் திரு. சேகர்பாபு அவர்களுக்கு எனது இதயபூர்வமான நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொண்டு, உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி கூறி விடைபெறுகிறேன்.” என்று தெரிவித்தார்.