தமிழிசை பள்ளி பருவத்திலேயே தெலுங்கு கற்றுவிட்டாரா? பதிலடி கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்
பாஜகவின் தமிழிசை சவுந்திர ராஜன் முதலமிச்சர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகள் இடம்பெற்றிருந்தன.

தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பதுதான் பாஜக ஆட்சியாளர்களின் ரகசியத் திட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.
பாஜகவின் தமிழிசை சவுந்திர ராஜன் முதலமிச்சர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் இந்தி இடம்பெறவில்லை.
இதுமட்டுமில்லாமல் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை “தமிழ்நாட்டில் எந்தப் பள்ளியிலும் தமிழ் கட்டாயமாக்கப்படவில்லை. இப்படியொரு சூழலை வைத்து கொண்டு நான் கேட்கிறேன். தமிழ், தமிழ் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். எவ்வளவு தமிழ் இலக்கியங்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் அக்கறை செலுத்தினார்கள்? தமிழ்ப் பல்கலைக்கழகம் என்ன நிலையில் உள்ளது? தமிழ்நாட்டிலேயே தமிழை வளர்க்காமல் இருமொழி கொள்கை என்று ஆங்கிலத்தை வளர்க்கிறார்கள். அதனை பெருமையாக பேசுகிறார்கள். ஆங்கிலத்தை வளர்த்தால் தமிழ் அழியாதா?” என கேள்வி எழுப்பியிருந்தார்.
மும்மொழியில் வாழ்த்துகிறேன்...
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) February 28, 2025
“மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!”
“Wishing the Honourable Chief Minister Thiru M.K. Stalin a very happy birthday!”
“గౌరవనీయ ముఖ్యమంత్రి శ్రీ ము.క. స్టాలిన్ గారికి హృదయపూర్వక జన్మదిన… pic.twitter.com/4evSVI6ubC
இந்நிலையில் இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் “தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பதுதான் பாஜக ஆட்சியாளர்களின் ரகசியத் திட்டம். பாஜக ஆட்சியாளர்களின் ரகசியத் திட்டத்தை வெளிப்படையாக எதிர்க்கும் வலிமை கொண்டதுதான் திராவிட இயக்கம்.
தமிழ்நாட்டில் ஆதிக்க இந்தியையும் சமஸ்கிருதத்தையும் கட்டாயமாக திணிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்.
ஒருவர் விரும்பும் எந்த மொழிக்கும் நாங்கள் எதிரிகள் அல்ல. எந்த மொழியையும் எங்கள் மீது திணிக்காதீர்கள். அறிவியலை புறக்கணிக்கும் பாஜகவும் அதன் நிர்வாகிகளும் மொழித் திணிப்பை கட்டாயமாக்குகின்றனர்.
ஒவ்வொரு மொழிக்கும் தேவையான தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதுதான் மாணவர்களின் எதிர்காலத்துக்கு பயனளிக்கும். தெலங்கானா ஆளுநராக இருந்ததால்தான் தமிழிசை தெலுங்கு கற்றுள்ளார். அதனால் தெலுங்கு மொழியில் வாழ்த்தியுள்ளார். தமிழிசை பள்ளி பருவத்திலேயே தெலுங்கு கற்றுக்கொள்ளவில்லை. தெலங்கானா ஆளுநராக பணியாற்றியதால் தெலுங்கு பழகி உள்ளார். ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டாம். தேவைக்காக கற்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை தமிழிசை உறுதி படுத்தியுள்ளார். அவரின் வாழ்த்து செய்தியில் தெலுங்கு இடம் பெற்றிருக்கிறது. இந்தி இடம்பெறவில்லை. அதுதான் தமிழ்நாட்டு உணர்வின் வெளிப்பாடு.
கோட்சே வழியை பின்பற்றும் இயக்கத்தினர் ஒருபோதும் காந்தியின் நோக்கத்தை நிறைவேற்ற மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.





















