CM Stalin: சர்ச்சைக்குள்ளான கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்: கேள்வி எழுப்பிய இபிஎஸ்க்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பதில்!
பெரிய பிரச்சினைகள் கூட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தது. அதை சரிசெய்து தான் திறந்து வைத்திருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெரிய பிரச்சினைகள் கூட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தது. அதை சரிசெய்து தான் திறந்து வைத்திருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதிமுக எம்.எல்.ஏ., செல்லூர் ராஜூ: தென் மாவட்ட மக்களுக்கு வசதியாக கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் திறந்து வைத்திருக்கிறீர்கள். அங்கிருந்து நகருக்குள் வருவதற்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இப்பிரச்சினையில் முதலமைச்சர், போக்குவரத்து மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் சிவசங்கர்: கிளாம்பாக்கத்தை அதிமுக ஆட்சியில் தான் தேர்வு செய்தது.நீங்கள் ஆரம்பித்த அந்த திட்டத்தை பாதியில் விடாமல் திராவிட மாடல் ஆட்சியில் செய்யப்பட்டது. 30% பணிகளோடு அதிமுக ஆட்சியில் விட்டு செல்லப்பட்ட நிலையில் இன்று மீதமுள்ள பணிகள் திமுக ஆட்சியில் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முழுவதுமாக மக்கள் ஏற்று பயணித்து கொண்டிருக்கிறார்கள். பேருந்தில் பயணிப்பவர்கள் யாரும் பிரச்சினை செய்வதில்லை. பயணிக்காதவர்கள் தான் பிரச்சினை செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
அமைச்சர் சேகர்பாபு: 2013 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட கிளாம்பாக்கம் திட்டம் 2018 ஆம் ஆண்டு டெண்டர் கோரப்பட்டு 2019ல் ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டு பணி தொடங்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒப்பந்த கால அளவு முடிய வேண்டியது. ஆனால் ஆட்சி மாற்றம் நடந்த பின் நிறுத்தப்பட்ட பணிகள் முதலமைச்சர் உத்தரவின் பேரில் தொடங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டிய அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒருமுறை கூட பணிகளை சென்று பார்க்கவில்லை. நேற்று கூட அவர் ஒரு பேட்டியில், போதிய வசதிகள் செய்யவில்லை’ என குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற பணிகளை பட்டியலிட்டார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: நாங்கள் கொடுத்த அறிக்கையில், சிறு சிறு பிரச்சினைகளை சரி செய்திருந்தால் மக்கள் நடுரோட்டில் போராட்டம் நடத்தியிருக்க மாட்டார்கள். அதனை சரி செய்ய வேண்டும் என்று தான் சொன்னோம்.
முதலமைச்சர் ஸ்டாலின்: சிறு சிறு பிரச்சினைகள் மட்டுமல்ல பெரிய பிரச்சினைகள் கூட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தது. அதை தீர்த்து வைத்து தான் திறந்து வைத்தோம். அமைச்சரே, ‘இன்னும் பிரச்சினை இருந்தால் சொல்லுங்கள். நேரடியாக வாருங்கள். தீர்த்து வைக்கிறோம்’ என சொல்லியிருக்கிறார். அதனால் இந்த பிரச்சினையை இத்தோடு முடித்து கொள்ளுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.
இப்படியான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக இன்று காரசார விவாதம் நடைபெற்றது.