CM Stalin: கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை; இனி திங்கட்கிழமை தோறும் ரிப்போர்ட் வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமையும் ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமையும் ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளச்சாராய உயிரிழப்பு:
தமிழ்நாட்டை கடந்த சில நாட்களாக நிகழ்ந்து வரும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள எக்கியார்குப்பத்தில் கள்ளாச்சாராயம் குடித்ததாக 15 பேரும், செங்கல்பட்டில் 7 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், சிகிச்சைப் பெறுவோருக்கு ரூ.50 ஆயிரமும் தமிழ்நாடு அரசு நிவாரண உதவி அறிவித்துள்ளது. அதேசமயம் தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேரில் ஆய்வு செய்த முதல்வர்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முண்டியம்பாக்கம் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதேசமயம் உயிரிழந்தவர்கள் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழக்கவில்லை, லைகளில் பயன்படுத்தும் மெத்தனால் என்ற விஷ சாராயம் குடித்ததாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்திருந்தார். உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தமிழ்நாடு அரசு மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இப்படியான நிலையில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை தொடர்பாக காவல்துறை மற்றும் மதுவிலக்குத்துறை உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
அதன்படி இந்த கூட்டத்தில்,
- கள்ளச்சாரயம் மற்றும் போதைப் பொருட்களை விற்பவர் மீது குண்டர் சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கள்ளச்சாராயம், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமையும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும்.
- சிறப்பாக செயல்படும் அதிகாரிகளை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் நியமிக்க வேண்டும்
- பொதுமக்களிடம் புகார்களைப் பெற்று உடனடியாக அதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தொழிற்சாலைகளில் எரிசாராயம், மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும். மெத்தனாலை விஷச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும்.
- மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளின் வாட்ஸ்அப் எண்களை மக்களுக்கு தெரிவிக்கவும், மதுவிலக்கு குறித்து தகவலளிக்க 10581 என்ற எண் பயன்பாட்டில் இருப்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
- புகார்கள் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திங்கட்கிழமை தோறும் முதல்வரின் அலுவலகத்திற்கு அறிக்கை தர வேண்டும்.
- கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அந்தத் தொழிலிலிருந்து விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட அரசின் பல்வேறு வாழ்வாதாரத் திட்டங்கள் மூலம் பயன்பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
- பொதுமக்களிடையே கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளிகள், கல்லூரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுயஉதவிக்குழு மகளிரைக் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.