‛தனித் தமிழீழம் அமைத்து சீன முயற்சியை முறியடிப்போம்’ டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!
‘இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தைக் கைப்பற்ற வேண்டும்; அதன்மூலம் இந்தியாவை கண்காணிக்க வேண்டும் என்பது சீனாவின் நீண்டநாள் கனவு ஆகும். இப்போது அதை சாதித்துக் கொண்டது சீனா. இதுதொடர்பாக மத்திய அரசு என்ன செய்யப் போகிறது’ என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கையில் அமெரிக்காவால் செய்ய முடியாததை சீனா சாதித்திருக்கிறது. தமிழக எல்லையையொட்டிய அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், அதையொட்டிய 15,000 ஏக்கர் நிலங்களையும் சீனாவுக்கு தாரை வார்த்துள்ள சிங்கள அரசு, அவற்றை சீன இறையாண்மை கொண்ட பகுதியாக அறிவித்திருக்கிறது. இதன்மூலம் இந்தியப் பாதுகாப்புக்கு, குறிப்பாக தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு இதுவரை இல்லாத அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.
இலங்கைத் தலைநகர் கொழும்பு துறைமுகத்துக்கு மிக அருகில் அம்பாந்தோட்டையில் புதிய துறைமுகம் அமைக்க இலங்கைக்கு சீனா கடனை வாரி வழங்கியது. சீனாவிடம் வாங்கிய கடனை இலங்கை அரசால் திருப்பி செலுத்த முடியாத நிலையில், அம்பாந்தோட்டை துறைமுகம், அதையொட்டிய 15,000 ஏக்கர் நிலங்களை சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது. ஆனாலும் கூட அப்பகுதிகளை இராணுவம் உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட ஏராளமான கட்டுப்பாடுகளை சீனாவுக்கு இலங்கை விதித்திருந்தது. ஆனால், இப்போது ஒட்டுமொத்த இலங்கையும் ராஜபக்சே சகோதரர்கள் ஆட்சியின் கீழ் வந்து விட்டதால் அம்பாந்தோட்டை துறைமுகம் அமைந்துள்ள 660 ஏக்கர் நிலங்களை சீன இறையாண்மை கொண்ட பகுதியாக அறிவிப்பதற்காக சட்டம் அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது. இனி அந்தப் பகுதிகள் சீனாவின் அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்ட பகுதிகளாகவே இருக்கும். இலங்கை அரசின் அரசியலமைப்பு சட்டமும், பிற சட்டங்களும் அம்பாந்தோட்டை பகுதியில் இனி செல்லாது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தைக் கைப்பற்ற வேண்டும்; அதன்மூலம் இந்தியாவை கண்காணிக்க வேண்டும் என்பது சீனாவின் நீண்டநாள் கனவு ஆகும். இப்போது அதை சாதித்துக் கொண்டது மட்டுமின்றி, அப்பகுதிக்கு இறையாண்மையையும் பெற்றிருப்பதால் அங்கு கடற்படை தளத்தைக் கூட சீன அரசு அமைக்கும். இலங்கை அரசே நினைத்தால் கூட இனி அதை தடுக்க முடியாது. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஏற்கனவே சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், அங்கிருந்து இந்தியாவை சீன உளவு அமைப்புகளால் எளிதாக கண்காணிக்க முடியும். அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து சில நூறு கிலோ மீட்டர் தொலைவில் தான் கன்னியாகுமரி நகரம் அமைந்திருக்கிறது.
இலங்கையின் தெற்கில் அம்பாந்தோட்டையிலிருந்து தமிழகத்தின் தென்பகுதிகளை கண்காணிக்கும் சீனா, இலங்கையின் வடக்குப் பகுதியில் தமிழகத்தின் இராமேஸ்வரத்தை ஒட்டியுள்ள நெடுந்தீவு, அனலைத் தீவு, நயினாத் தீவு ஆகிய 3 தீவுகளை காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதற்காக தனியார் நிறுவனங்கள் மூலம் பெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட தென்னிந்தியாவை இப்போது சீனா சுற்றி வளைத்திருக்கிறது.
இலங்கையிலிருந்து சீனா மூலமாக இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலுக்கு இந்திய அரசின் தவறான இலங்கை வெளியுறவுக் கொள்கை தான் காரணமாகும். தென்னிந்தியாவில் சீனா தாக்குதல் நடத்த முயன்றால் அது இலங்கை வழியாகத் தான் நடைபெறக்கூடும் என்பதை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். அது இப்போது உண்மையாகி விட்டது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்தவரை இலங்கையில் காலூன்றி இந்தியாவை கண்காணிக்க வேண்டும்; அச்சுறுத்த வேண்டும் என்ற அமெரிக்கா உள்ளிட்ட உலக வல்லரசுகளின் முயற்சிகள் பலிக்கவில்லை. ஆனால், விடுதலைப்புலிகள் வீழ்த்தப்பட்டதன் பயனாக இலங்கை வடக்கிலும், தெற்கிலும் சீனா கால் பதித்து விட்டது.
அமெரிக்க வேலையை உதறி பால் பண்ணையில் ரூ.44 கோடி வருவாய் ஈட்டும் ‛ஐஐடி’ மாணவர்!
ஈழத்தமிழர்களை பகைத்துக் கொண்டு, இந்தியத் தமிழர்களை உதாசீனப்படுத்தி விட்டு, இலங்கைக்கு இந்தியா எவ்வளவு உதவிகளைச் செய்தாலும் அவற்றையெல்லாம் சிங்கள ஆட்சியாளர்கள் நினைத்துப் பார்க்கவில்லை. மாறாக சீனாவுக்கு ஆதரவாக இந்தியாவிடமிருந்து வெகுதொலைவுக்கு அவர்கள் விலகிப் போய்விட்டார்கள். இன்னமும் இலங்கையை பகைத்துக் கொள்ளக்கூடாது என்ற கொள்கை நிலைப்பாட்டை இந்தியா தொடரக் கூடாது. மாறாக, சீனாவின் நண்பன் என்ற கோணத்தில் தான் இலங்கையை பார்க்க வேண்டும். அதற்கேற்ற வகையில் இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு குறித்த நமது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும்.
அதற்கான நடவடிக்கைகளின் முதற்கட்டமாக இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் தமிழர்களின் கரங்களை வலுப்படுத்துவதற்கு உதவ வேண்டும். ஐக்கிய நாடுகள் அவையின் உதவியுடன் இலங்கையில் தமிழர்களுக்கு தனித்தமிழீழம் அமைத்துக் கொடுத்து, இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் வலிமையை அதிகரிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளர்.