மிளகாய் மண்டலம், குண்டு வத்தலுக்கு புவிசார் குறியீடு - வேளாண் பட்ஜெட்டை வரவேற்கும் விவசாயிகள்
தாமிரபரணி -வைப்பாறு நதி இணைப்பு திட்டம் பற்றி அறிவிப்பு வெளியிடப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒட்டப்பிடாரம், கயத்தார், புதூர், விளாத்திகுளம் போன்ற பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் ஆண்டுக்கொருமுறை மட்டுமே புரட்டாசி ராபி பருவத்தில் சிறுதானியங்கள், பயறுவகைகள், பணப்பயிர்கள், வத்தல், வெங்காயம், எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழை சீற்றம் அல்லது வறட்சி என ஏதாவது ஒரு கோரப்பிடியில் விவசாயிகள் சிக்கி தவித்து வந்தனர். அதேபோல் இந்தாண்டும் போதிய மழையின்றி வறட்சி ஏற்பட்டது. மனம் தளராத விவசாயிகள் தொடர்ந்து விவசாய பணியில் ஈடுபட்டு வந்தனர். தவிர விளாத்திகுளம், புதூர், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி பகுதி நிலங்கள் கரிசல் மண் சார்ந்தவை என்பதால் இங்கு விளையும் முண்டு வத்தல் காரத்தன்மையும், அதிக விதையும், சுவையும் கொண்டதாகும் சந்தையில் விளாத்திகுளம் முண்டு வத்தலுக்கு நல்ல மவுசுண்டு.
இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன், "தற்போது குண்டு வத்தல் வரத்து அதிகமாக உள்ளதால் இருப்பு வைக்க குடோன் வசதி இல்லாததால் அவ்வப்போது விலைக்கு விற்று விடுகின்றனர். கடந்த சில ஆண்டுகளை விட இந்தாண்டு ஓரளவு விளைச்சலை முண்டு வத்தல் பெற்றுள்ளது. அதன் செலவும் பன்மடங்காகிறது.
தவிர சமீபத்தில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, சாயல்குடி, முதுகுளத்தூர், ஆர்எஸ் மங்கலம் போன்ற பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் குண்டு மிளகாய்க்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி உறுதுணையாக இருந்தார். அதே போல் விளாத்திகுளம், கோவில்பட்டி பகுதியில் விளைவிக்கபடும் முண்டு வத்தலுக்கும் புவிசார் குறியீடு கிடைக்கவும், கிராமங்கள் தோறும் விளைபொருட்கள் இருப்பு வைக்க குடோன் கட்டித்தரவும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்து இருந்தார்” என்று கூறினார்.
இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக விரிவாக ஏபிபி நாடு செய்தி வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் தமிழக அரசு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்க ரூ. 30 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.விளாத்திகுளம், புதூர் விவசாயிகள் வத்தலை சேமிக்க குளிர்பதன குடோன் தேவை என்பதையும் பதிவு செய்து இருந்தது ஏபிபி நாடு. இந்நிலையில் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் குண்டு வத்தலுக்கு புவிசார் குறீயிடு பெற நிதி ஒதுக்கீடு, உணவு பதப்படுத்துதலில் ஈடுபடும் தனியார் தொழில் முனைவோருக்கு சலுகைகள், ஊக்கத்தொகை, மானியம் வழங்கும் உணவு பதப்படுத்துதல் கொள்கை மறுசீரமைக்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜனிடம் கேட்டபோது, “வேளாண் நிதிநிலை அறிக்கையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி மிளகாய் மையம் அமைக்கப்படும் என தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும் கடந்த ஆட்சியின் கடைசி நிதிநிலை அறிக்கை 2020 - 2021ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் விளாத்திகுளத்தில் மிளகாய் மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது. ஆனால் செயல்படுத்தவில்லை. தற்போதும் மிளகாய் மையம் அறிவித்திருப்பது ஏட்டளவில் இல்லாமல் செயல்படுத்த வேண்டும். தவிர பனைமரங்கள் பாதுகாக்க ரூஇரண்டு கோடியும், பனைமரங்கள் ஆராய்ச்சிக்கு ரூ 15 கோடியும் ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்து உள்ளது வரவேற்க்கத்தக்கது. தவிர கடந்த அரசில் விதை மானியம், உரம் மானியம், மருந்து மானியம், உழவு மானியம் என விவசாயிகளின் வங்கிகணக்கிற்கு விடுவிக்கப்பட்டது. புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு அம்மானியத்தை நிறுத்திவிட்டு இடுபொருளாக வழங்குகிறது. இடுபொருட்கள் பயன் இன்றி உள்ளது. பழைய அரசு வழங்கியபடி உழவு, விதை, மருந்து, இவற்றுக்கு மானியத்தை பணமாக வழங்க வேண்டும்.
தவிர பட்ஜெட்டில் சீமை கருவேல மரங்களை அகற்றிவிட்டு சீமையாக்குவோம் என அரசு கூறியுள்ளது. சீமைகருவேல மரங்கள் அகற்ற ஏக்கருக்கு ரூ 4 ஆயிரம் தமிழக அரசு வழங்குகிறது. ஏக்கருக்கு ரூ 15 ஆயிரம் செலவாகிறது. இதனால் அரசின் வேளாண்மை பொறியியல் துறை மூலம் அரசே விவசாய நிலங்களில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்றி தர வேண்டும். கலைஞரின் ஒருங்கினைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ரூ.250 கோடி 2504 ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. எண்ணெய்வித்துக்கள் (சூரியகாந்தி, கடலை) ஆகியவற்றின் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருப்பது வரவேற்க்கத்தக்கது. சூரியகாந்திக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் விளையும் மிளகாய் வத்தல், முருங்கைக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைக்க ரூபாய் முப்பது இலட்சம் ஒதுக்கீடு செய்ததோடு இல்லாமல் விரைந்து பெற்றுத்தர வேண்டும். ஊரணிகள், குளங்கள் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயம் தாமிரபரணி -வைப்பாறு நதி இணைப்பு திட்டம் பற்றி அறிவிப்பு வெளியிடப்படாதது ஏமாற்றமளிக்கிறது” என்று கூறினார்.