CM Stalin Speech: போதைப் பழக்கம் கொடிய நோய்.. தனிமனிதருக்கு மட்டுமல்ல.. மொத்த மாநில வளர்ச்சிக்கும்.. முதலமைச்சர் ஸ்டாலின் உரை..
வடகிழக்கு மாநிலங்களில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதன் மூலம்தான் தமிழ்நாட்டில் போதைப்பொருள்கள் நுழைய முக்கிய ஆதாரமாக இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை செயல்படுத்தி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். இதில் காவல்துறை உயர் அதிகாரிகளும் மாணவர்களும் கலந்துக்கொண்டனர்.
அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற அக்கறை மிகுந்த நோக்கத்தோடு கடந்த ஆண்டு போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. போதைப் பொருள்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும், போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுகிறவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
அதன் காரணமாக, தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் வெகுவாக குறைந்து கொண்டு வருகிறது. அதற்காக, முழுவதுமாக தடுத்துவிட்டோம் என்று சொல்ல வரவில்லை. குறைந்து கொண்டு வருகிறது என்று தான் நான் சொல்கிறேன். இந்தளவுக்கு குறைய. அக்கறையுடனும், பொறுப்புடனும் செயல்பட்டு வருகின்ற காவல்துறை அதிகாரிகள் எல்லோருக்கும் என்னுடைய நன்றியை முதலில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த ஆர்வமும், அக்கறையும் குறையாமல் செயல்பட்டு, முற்றிலுமாக போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் திட்டத்தை கடந்த ஆண்டு தொடங்கியபோது, இது சமுதாய நலனுக்கான ஒரு சிறந்த திட்டம் என்று மருத்துவர்களும், பொதுமக்களும் வரவேற்றார்கள். போதைப் பழக்கத்தால், சீரழிந்து இருக்கின்ற மாணவர்களையும், இளைஞர்களையும் மீட்டெடுக்க வேண்டிய பெரும்பணி தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது என்று சொன்னார்கள். அவர்கள் நம்பிக்கைக்கேற்ப இந்த விஷயத்தில், தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறது.
போதைப் பழக்கம் என்பது, அதை பயன்படுத்துகிறவர்கள் மட்டுமில்லாமல், அவர்கள் குடும்பத்தினருக்கும், சமூகத்துக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்ற ஒரு கொடிய நோய், தனி மனிதருடைய வாழ்க்கையில் மட்டுமில்லை - மாநிலத் வளர்ச்சியிலேயும் மிகப்பெரிய பாதிப்பை அது ஏற்படுத்தும். அதனாலதான், ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை தடுக்கின்ற நடவடிக்கையில் நாங்கள் தீவிரமாக இறங்கி இருக்கிறோம்.
கடந்த ஆண்டு இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து நான் பேசும்போது, போதைப்பொருள் விற்பனை சங்கிலியை உடைக்க வேண்டும்; பள்ளி, கல்லூரிகளின் அருகே போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சொன்னேன்.
இந்த நடவடிக்கையில் நான் சர்வாதிகாரி போல செயல்படுவேன்" என்று கொஞ்சம் கடுமையாகவே பேசியிருந்தேன். அந்த அடிப்படையில் தான் அரசும் நடவடிக்கை எடுத்துக்கொண்டு வருகிறது. போதைப்பொருள் விற்பனையில் தொடர்ந்து ஈடுபடக்கூடிய யாராக இருந்தாலும், அவர்கள் மேல் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.
2022 ஆகஸ்ட் 11 அன்று, மாபெரும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு, 70 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். தென்மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகள் மற்றும் முக்கிய இடங்களில் கஞ்சா விற்பனை நடந்தால், பொதுமக்கள் தகவல் தெரிவிக்க புகார் எண்களும் வெளியிடப்பட்டது. போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, வழக்குகள் பதிதல், கைது, போதைப் பொருட்கள் பறிமுதல், சொத்துகள் முடக்கம் என்று பல்வேறு நடவடிக்கைகளை செய்து கொண்டு வருகிறோம். ஆகஸ்ட் 11, 2022 முதல், 154 குற்றவாளிகளுக்கு எதிராக நிதி தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவர்களிடமிருந்து 18 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 45 அசையும் / அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத அளவுக்கு 16 ஆயிரம் கிலோ கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஓராண்டில், NDPS சட்டவழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 5,184 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கிறது. ஆந்திரப் பிரதேசம். ஒடிசா, தெலங்கானா மற்றும் இந்தியாவோட வடகிழக்கு மாநிலங்களிலிருந்து கஞ்சா கடத்தப்படுவதுதான், தமிழ்நாட்டுக்கு கஞ்சா நுழைய முக்கிய ஆதாரமாக இருக்கிறது. ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளில் 'போதைப்பொருள் எதிர்ப்பு மன்றம்' அமைத்து, அந்தக் கல்வி நிறுவனத்தை போதைப்பொருள் இல்லாத வளாகமாக அறிவிக்க ஆணையிடப்பட்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் பள்ளி. கல்லூரிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதைப்பொருள் தடுப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இது ஆரோக்கியமான மற்றும் பொறுப்புள்ள அடுத்த தலைமுறையை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்.
பள்ளி மாணவர்கள் நிறைய பேர் இங்கு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு பள்ளியில் Health is Wealth என்று சொல்லிக் கொடுத்திருப்பார்கள். இதை நீங்கள் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆசிரியர்களும் இதை எப்போதும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கவேண்டும். நீங்கள் என்ன தான் பணம் சம்பாதித்தாலும் நல்ல உடல்நிலை இருந்தால்தான் உங்களால் தொடர்ந்து உழைக்கவும் முடியும். சம்பாதித்த பணத்தை வைத்து சந்தோஷமாக இருக்கவும் முடியும். இதுதான் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரையாக வழங்கவேண்டும் என்று நான் இந்த தருணத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.