CM MK Stalin: ஏற்றமிகு ஏழு திட்டங்கள்.. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் புதிய திட்டங்கள் என்னென்ன?
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்கு முன்பு பேசிய அவர், ”பல்வேறு துறைகளில் நாட்டிற்கே முன்னோடியாக நமது தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. அரசியலை கடமையாகவும், தொண்டாகவும், சேவையாகவும் நினைக்க வைத்தவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர். எனக்கு யாரும் இலக்கு வைக்கவில்லை, எனக்கு நானே இலக்கு வைத்துள்ளதாக” தெரிவித்தார்.
இது தொடர்பான செய்தி வெளியீட்டில் “ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல் சமுதாயத்தின் விளிம்புநிலை மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு. இதுவரை அரசால் வழங்கப்பட்டு வந்த மாதாந்திர உதவித் தொகையை ரூ.1,000/-லிருந்து, ரூ1.500/- ஆக உயர்த்தி வழங்கியதாகும். அதேபோல் பகுதிகளில் பள்ளிக்கு கிராமப்புற, நகர்ப்புர செல்லும் குழந்தைகளின் நலனுக்காக "மாண்புமிகு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் பள்ளியில் மாணவ மாணவிகளின் இடைநிற்றல் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தவிர்க்கப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடின்றி குழந்தைகள் ஆரோக்கியமாக வளரவேண்டும் எனும் நோக்கில் சமூக நலத்துறை மூலம் சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு சுயமாக தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி, கருவிகள் வழங்குதல் போன்ற பல்வேறு பயனுள்ள திட்டங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது. பொது மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் பெற வேண்டும் என்ற சீரிய எண்ணத்தில் மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48, வரும் முன் காப்போம், நடமாடும் மருத்துவமைனைத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளில் மக்களை பயன்படுத்தக் கூடாது என்ற உயரிய சிந்தனையில் பாதாளச் சாக்கடைகளை நவீன இயந்திரங்களைக் கொண்டு சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தூய்மைப் பணியாளர்களின் சமூக பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை ஒருங்கிணைத்து தொழில் முனைவோர்களாக மாற்றிட தனியார் தன்னார்வ அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறாக, அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்துத் துறை வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்ற அடிப்படையில், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் திட்டம், சிற்பி திட்டம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் இயக்கம், புதுமைப்பெண். உயர் கல்வி உறுதித் திட்டம், விவசாயிகளின் வாழ்வு மலர்ந்திட 1.50 இலட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டம், மகளிருக்கு இலவச பேருந்துப் பயணச் சலுகை. மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம். கள ஆய்வில் முதல்வர் திட்டம். தூய்மைப் பணியாளர் மேம்பாட்டுத் திட்டம். வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை. உயரிய விருது பெற்ற எழுத்தாளரிகளுக்கு கனவு இல்லம் திட்டம், ஒலிம்பிக் தங்கவேட்டை திட்டம். மதுரையில் கலைஞர் நூலகம், அயலகத் தமிழர்கள் நல வாரியம் போன்ற எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி அரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு திட்டமும் பொதுமக்கள், விளிம்புநிலை மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டங்களின் விரிவாக்கமாக இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சமூகநலத்துறை மூலம் சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத் தொடக்க விழா, திருநங்கைகளக்கு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா, நகராட்சி நிர்வாகத் துறை மூலம் தூய்மைப் பணியாளர்கள் தொழில் முனைவோர்களாக மாற்ற தனியாருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், சிறந்த தரமான மருத்துவம் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் ரூ1,136 கோடியில் 44 மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் பெரும் வரவேற்பைப் பெற்ற மாண்புமிகு முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யும் திட்டம் சிறப்பாக நடைபெற உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.