செல்போனை தொட்டதால் காணாமல் போன 99,000 ரூபாய்! மோசடி வலைக்குள் சிக்கிய சென்னைவாசி! வார்னிங் கொடுத்த சென்னை காவல் துறையினர்
போலியாக வரும் போக்குவரத்து சலான் URL Linkகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தல்

Link - யை தொட்டதால் காணமால் போன பணம்
சென்னை தரமணியில் சக்திவேல் ( வயது 32 ) என்பவர் வசித்து வருகிறார். சக்திவேலின் கைப்பேசி எண்ணிற்கு அவரது இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணை குறிப்பிட்டு ஒரு குறுஞ்செய்தி வந்ததாகவும் , அதில் குறிப்பிட்டிருந்த குறுஞ்செய்தியில் இருந்த இணையதள இணைப்பிற்குள் (URL Link) சென்று விவரம் அறிந்து கொள்ளுங்கள் என்று வந்த குறுஞ் செய்தியை உண்மை என நம்பிய சக்திவேல் அந்த இணையதள இணைப்பை தொட்ட போது , அவருடைய கைப்பேசி Hack செய்யப்பட்டு செயலிழந்து விட்டதது.
அதனைத் தொடர்ந்து சக்திவேல் கைப்பேசிக்கு பல OTP எண்கள் வந்ததென்றும் , அனைத்து குறுஞ் செய்திகளையும் கைப்பேசியிலிருந்து அழித்து விட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மனுதாரரின் Kotak வங்கி கணக்கிலிருந்த பணத்திலிருந்து ரூ.50,000/-, ரூ.49,000/-இருமுறை எடுக்கப்பட்டுள்ளது என்று குறுஞ்செய்தி வந்ததாகவும் , இது குறித்து சக்திவேல் என்பவர் கடந்த 22.06.2025 அன்று, J-13 தரமணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் , புகாரானது அடையாறு காவல் மாவட்டத்தில் இயங்கி வரும் இணையவழி குற்றப் பிரிவில் விசாரணையில் இருந்து வருகிறது.
SMS மற்றும் Whats app - ல் Link பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்
சமீப காலமாக இணைய தளத்தின் மூலமாக குற்றங்களை புரிந்து வரும் மர்ம நபர்கள் மேலே குறிப்பிட்டுள்ளதை போன்று உண்மையில்லாத குறுஞ் செய்திகளை பொது மக்களுக்கு அனுப்பி அதன் மூலம் மோசடியான இணையவழி இணைப்புகளை (URL Link) தொடச் செய்து அதன் மூலமாக கைப்பேசியை செயலிழக்க வைத்து பாதிக்கப்பட்ட நபர்களின் வங்கி கணக்குகளிலிருந்து சட்ட விரோதமாக பணத்தை திருடி வருகின்றனர்.
பொதுமக்கள் அனைவரும் மிகவும் விழிப்புணர்வோடு செயல்பட்டு தாங்கள் பயன்படுத்தும் கைப்பேசிக்கு வரும் SMS மற்றும் WhatsApp-க்கு வரும் குறுஞ் செய்திகளில் Traffic Challanல் குறிப்பிடுவதை போன்று வாகன எண்ணை போலியாக குறிப்பிட்டு அனுப்பும் இணையவழி இணைப்பிற்குள் (URL Link) செல்ல வேண்டாம் என்றும் மேலும் இணையவழி குற்றவாளிகள் கெட்ட நோக்கதோடு அனுப்பி வைக்கும் மோசடியான URL Link மற்றும் APP -க்குள் செல்லாமல் விழிப்புணர்வுடன் இருக்கும் படியும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேசிய இணைய வழி குற்றத் தடுப்பு உதவி எண்
மேலும் இணையவழி மோசடிகாரர்கள் அனுப்பி வைக்கும் URL Link மற்றும் APP-க்குள் சென்றால் , அது உடனே மோசடியான இணையவழி தளத்திற்கு அழைத்து சென்று பாதிக்கப்பட்ட நபர்களின் (புகார்தாரர்) கைப்பேசிக்கு வரும் குறுஞ்செய்தி, OTP, UPI விவரங்கள், கைப்பேசியில் இருக்கும் தொடர்பு எண்கள் மற்றும் சேமித்து வைத்திருக்கும் அனைத்து விவரங்களையும் மர்மநபர்கள் தொலைவிலிருந்தே எடுத்து மோசடி வேலையில் ஈடுபட்டு பண இழப்பை ஏற்படுத்துகின்றனர்.
பொது மக்கள் யாரேனும் இதுபோன்று இணையவழி குற்றத்தால் பாதிக்கப்பட்டது தெரியவந்தால் உடனடியாக தேசிய இணையவழி குற்றத் தடுப்பு உதவி எண் 1930-க்கு தொடர்புகொண்டு விவரங்களை தெரிவிக்க வேண்டும் அல்லது இணையவழி மூலமாக மனுதாக்கல் செய்ய https.www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.





















