8 மணி நேரத்தில் சென்னை-ராமேஸ்வரம்... வருகிறது புதிய வந்தே பாரத் சேவை
Chennai Rameswaram Vande Bharat Express: சென்னை-ராமேஸ்வரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 600 கி.மீ தூரத்தை 8 மணி நேரத்திற்குள் செல்லும். தற்போது சேது சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இந்த தூரத்தை 10 மணி நேரம் 25 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது.

ராமேஸ்வரத்தில் கடந்த மாதம் 550 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
ராமேஸ்வரம் ரயில்கள்:
பாம்பன் புதிய பாலம் திறப்புக்கு பின்னர் மண்டபம் வரை இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும் தற்போது ராமேஸ்வரம் வரை இயக்கப்படுகிறது. அதில் ராமேஸ்வரம்-மதுரை பயணிகள் ரயில், ராமேஸ்வரம் திருச்சி பயணிகள் ரயில், ராமேஸ்வரம் புவனேஷ்வர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள், ராமேஸ்வரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் அயோத்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் அங்கு இருந்து புறப்படுகின்றன.
இதுமட்டுமில்லாமல் தாம்பரம்-ராமேஸ்வரம் இடையே பாம்பன் எக்ஸ்பிரஸ் என்கிற புதிய ரயில் சேவையும் துவக்கி வைக்கப்பட்டது, ராமேஸ்வரத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதாலும் ராமேஸ்வரம் வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால் பகல் நேரத்தில் வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.
புதிய வந்தே பாரத்:
தமிழக் எம்பிக்களும் ரயில்வே அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்த நிலையில் புதிய வந்தே பாரத் இயக்கத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. சென்னை-ராமேஸ்வரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 600 கி.மீ தூரத்தை 8 மணி நேரத்திற்குள் செல்லும். தற்போது சேது சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இந்த தூரத்தை 10 மணி நேரம் 25 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது.
நிறுத்தங்கள் விவரம்:
சென்னை-ராமேஸ்வரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் முக்கிய நிலையங்களில் நின்று செல்லும், மேலும் இந்த ரயில் கார்டு லைனான சென்னை-விழுப்புரம்-அரியலூர்-திருச்சி வழித்தடத்தில் செல்லும். இந்த ரயிலுக்கான நிறுத்தங்கள் பின்வருமாறு:
- தாம்பரம்
- செங்கல்பட்டு சந்திப்பு
- விழுப்புரம் சந்திப்பு
- விருத்தாசலம் சந்திப்பு
- திருச்சிராப்பள்ளி
- மானாமதுரை சந்திப்பு
- மண்டபம்
கட்டணம் எவ்வளவு?
சென்னையிலிருந்து ராமேஸ்வரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் எக்சிகியூட்டிவ் ஏசி கோச் மற்றும் ஏழு ஏசி சேர் கார் கோச்கள் உட்பட மொத்தம் எட்டு பெட்டிகள் இருக்கும். ஏசி சேர் காருக்கு கட்டணமாக சுமார் ரூ.1,400 ஆகவும், எக்சிகியூட்டிவ் ஏசிக்கு கட்டணமாக ரூ.2,400 ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புறப்படும் நேரம்:
சென்னையிலிருந்து ராமேஸ்வரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து அதிகாலை 5:50 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 2:30 மணிக்கு ராமேஸ்வரத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரும்பும் பயணத்தில், ராமேஸ்வரத்தில் பிற்பகல் 3:00 மணிக்குப் புறப்பட்டு இரவு 11:30 மணிக்கு சென்னையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயிலானது வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் என்றும் கூறப்படுகிறது.
9வது வந்தே பாரத் ரயில்:
இந்த ரயில் பயன்பாட்டுக்கு வந்தால் தமிழ்நாட்டின் ஒன்பதாவது வந்தே பாரத் ரயிலாக இது இருக்கும்.தற்போது தமிழ்நாட்டில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் விவரம் பின்வருமாறு:
- எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - மைசூரு: ரயில் எண்கள் 20607/08.
- கோயம்புத்தூர் - பெங்களூரு: ரயில் எண்கள் 20641/42.
- எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர்: ரயில் எண்கள் 20643/44.
- மைசூரு - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்: ரயில் எண்கள் 20663/64.
- திருநெல்வேலி - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்: ரயில் எண்கள் 20665/66.
- எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - விஜயவாடா: ரயில் எண்கள் 20677/78.
- சென்னை எழும்பூர் முதல் நாகர்கோவில்: ரயில் எண்கள் 20627/28.
- மதுரை - பெங்களூரு கண்டோன்மென்ட்: ரயில் எண்கள் 20671/72.






















