ஊரடங்கு சமயத்தில் அவசர உதவியா? சென்னை காவல்துறையை தொடர்புகொள்ளவேண்டிய எண்கள் இதோ..
14 நாட்கள் முழு ஊரடங்கின் போது சென்னை காவல்துறை சார்பில் 24 மணிநேர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வரும் சூழலில், இன்று முதல் வரும் 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவை தவிர இதர தேவைகளுக்கு மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் 14 நாட்கள் ஊரடங்கு காலத்தில் மக்கள் அவசர உதவிக்கு காவல்துறையை அழைக்க புதிய உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை ஒரு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி முழு ஊரடங்கு தொடர்பான சந்தேகங்கள், முதியவர்களுக்கான உதவி, தனியாக தங்கி இருக்கும் பெண்களுக்கு உதவி உள்ளிட்ட தேவைகளுக்கு சென்னை மக்கள் காவல்துறை உதவி மையங்களை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்கு காலத்தில் ஆக்சிஜன் பெறுவது, ரெம்டெசிவிர் மருந்தை பெறுவது மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்து செல்வது தொடர்பாகவும் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று காவல்துறை கூறியுள்ளது. இதற்காக 94981-81236, 94981-81239 என்ற இரண்டு புதிய எண்கள் அறிவிகப்பட்டுள்ளன. இந்த உதவி மையத்தை உதவி ஆணையர் தலைமையிலான குழு நடத்தும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.