RMC on Cyclone: வங்கக் கடலில் புயல்; சென்னையில் மிக கனமழை; வானிலை மைய தென் மண்டல தலைவர் அமுதா கூறியது என்ன.?
TN Weather Update: சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா, வங்கக் கடலில் புயல் உருவாகுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அவர் என்ன கூறினார் தெரியுமா.?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாகவும், 27 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளதாகவும், செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார். மேலும், வங்கக் கடலில் புயல் உருவாகுமா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார். அது குறித்து தற்போது பார்க்கலாம்.
“3 மணி நேரத்தில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி“
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாகவும், 27 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் சராசரியாக 17 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், இன்று காலை 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக தெரிவித்தார். அதாவது 5.30 மணிக்கு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 8.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதாக கூறினார்.
வங்கக் கடலில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.
“வங்கக் கடலில் புயல்.?, நாளை தெரியும்“
மேலும், வங்கக் கடலில் புயல் உருவாகுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அது குறித்து நாளை தெரியவரும் என கூறினார். சென்னையில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மையம் கொண்டுள்ளதகாவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என கூறிய அவர், 23-ம் தேதி அநேக இடங்களில் மழை பெய்யும் என தெரிவித்தார். வரும் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னைக்கு இன்றும், நாளையும் ஆரஞ்சு அலெர்ட்
தொடர்ந்து பேசிய அமுதா, சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். மேலும், சென்னைக்கு இன்றும், நாளையும் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெட் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறித்தும் அவர் தெரிவித்தார்.
ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா அறிவுறுத்தினார்.




















