TN Weather Update: ஒரு பக்கம் மழை.. ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்றைய வானிலை நிலவரம் இது தான்..
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
06.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
07.04.2023 மற்றும் 08.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
09.04.2023 மற்றும் 10.04.202: உள் தமிழக மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
குண்டடம் (திருப்பூர்) 3, தாளவாடி (ஈரோடு), சங்கரிதுர்கம் (சேலம்) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிதமான மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டாலும் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வெயில் கொளுத்துகிறது. ஈரோட்டில் கடந்த 4 நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. நேற்றைய தினம், ஈரோட்டில் 39.4 (102.92 டிகிரி பாரன்ஹீட்) டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் 39 டிகிரி செல்சியஸை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக மதுரையில் 38.6 டிகிரி செல்சியஸ் டிகிரி பதிவாகியுள்ளது. மேலும் வேலூர், திருச்சி, திருப்பத்தூர், நாமக்கல், பாளையங்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கிளில் 37 டிகிரி செல்சியஸை கடந்து பதிவாகியுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் நிலையில் கானல் நீர் தென்படுகிறது. இந்த கானல் நீர் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆனால் தமிழகத்தின் உள் மவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அந்த பகுதிகளில் மட்டும் வெயிலின் தாக்கம் சற்று கூறைவாக உள்ளது.