Weather report : தமிழ்நாட்டில் எந்த 9 மாவட்டங்களுக்கு கனமழை இன்று தெரியுமா?
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
“ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, கோயமுத்தூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி. மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், இதர தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம், ஈரோடு சத்தியமங்கலம் பகுதிகளில் தலா 11 செ.மீ. மழையும், குறைந்தபட்சமாக விருதுநகரின் காரியாபட்டி, புதுக்கோட்டை இலுப்பூர், திருச்சி சமயபுரம், கன்னியாகுமரி கன்னிமார், ராமநாதபுரம் திருவாடனை ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதன்காரணமாக, நாளை மற்றும் நாளை மறுநாள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
தெற்கு ஆந்திர கலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வந்தது. மாநிலம் முழுவதும் உள்ள ஏரிகள், குளங்களில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தென்னிந்தியாவில் தொடங்கியுள்ளதாக வானிலை மையம் நேற்று தகவல் தெரிவித்தது. சென்னையிலும் கடந்த சில வாரங்களாக மழை பரவலாக பெய்து வருவதால் முக்கிய குடிநீர் ஆதாரங்களான சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், அடுத்தாண்டு கோடைக்காலத்தில் சென்னையில் போதியளவு நீர் இருப்பு இருக்கும் என்று அதிகாரிகளும், பொதுமக்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்