வங்கக்கடலில் 24ம் தேதி புயல்.. தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வரும் 24-ந் தேதி புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
“ தென்மேற்கு பருவமழை மேலும் தெற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சிறிது தொலைவு முன்னேறியுள்ளது. அந்தமான் தீவுகளில் முழுமையாக முன்னேறியுள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, 24-ந் தேதி புயலாக வலுவடையும். அது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வடக்கு ஒடிசா – வங்கதேச கரையை வரும் 26-ந் தேதி கடக்கக்கூடும்.
வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்கள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொருத்தவரையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இதன் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசாகவும் இருக்கும். “ என்றார்.
வங்கக்கடலில் புதியதாக உருவாகியுள்ள இந்த புயலுக்கு யாஸ் என்று ஓமன் நாட்டினரால் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த யாஸ் புயல் பெரும் சேதங்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த யாஸ் புயல் காரணமாக தெற்கு ரயில்வே 12 சிறப்பு ரயில்களை ரத்து செய்துள்ளது. மே 23-ந் தேதி வரை நாகர்கோவில் -ஷாலிமார் சிறப்பு ரயிலும், கன்னியாகுமரி சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹவுரா- சென்னை இடையேயான சிறப்பு ரயில் மே 24 முதல் 26-ந் தேதி வரையிலும் ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதவிர, நாளை முதல் இயக்கப்பட இருந்த ஹவுரா - திருச்சி, நாகர்கோவில் -ஹவுரா, சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையேயான 22 ரயில்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான டவ்-தே புயலால் தமிழகம், கேரளம், குஜராத்தில் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது. மேலும், கேரளாவில் இந்த டவ் தே புயலால் பல இடங்களில் கனமழையும், கடுமையான வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டது. குஜராத்தில் டவ் - தே புயலால் பல இடங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.