Rope Car: இனி மெரினா முதல் பெசன்ட் நகர் வரை பறக்கலாம்!? வருகிறது ரோப் கார் சேவை?
சென்னையில் மிக முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று மெரினா கடற்கரை. வார நாட்களாக இருந்தாலும் சரி, வார இறுதியாக இருந்தாலும் மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
சென்னை மெரினா கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை வரை ரோப் கார் சேவை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மிக முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று மெரினா கடற்கரை. வார நாட்களாக இருந்தாலும் சரி, வார இறுதியாக இருந்தாலும் மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக அரசியல் தலைவர்களின் நினைவிடம்,கலங்கரை விளக்கம், சாந்தோம் தேவாலயம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் என அனைத்தும் அருகருகே உள்ளதால் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் மக்களும் அதிகளவில் வருகை தருவார்கள்.
இதனால் மெரினா கடற்கரை சாலைகள் போக்குவரத்து நெருக்கடியால் திணறும். அருகில் பறக்கும் ரயில் நிலையம் இருந்தாலும் மக்கள் தங்களது சொந்த வாகனங்களிலும், பொதுப்போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்துவதாலும் அந்த சாலையே எப்போதும் பரபரப்பாக காணப்படும். உலகின் 2வது மிக நீண்ட கடற்கரையான மெரினாவில் சிறப்பான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பலரும் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
குறிப்பாக பழனி கோவிலில் உள்ளது போன்று ரோப் கார் வசதி செய்தால் மக்கள் பயனடைவார்கள் என பலரும் தெரிவித்தனர். இதுதொடர்பாக அரசு பலமுறை பரிசீலித்து வந்தாலும் முடிவு எட்டப்படாமல் இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மெரினாவில் ரோப்கார் கொண்டு வருவது குறித்த சில முக்கிய தகவல்களைத் தெரிவித்திருந்தார். அதில் முதலில் 3.5 கி.மீ., தூரத்திற்கு இந்த ரோப் கார் திட்டம் கொண்டு வரப்படும் என்றும், இது வரும் காலங்களில் இது நகரின் பிற பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வண்ணம் மத்திய அரசு இந்தியாவில் 6 மாநிலங்களில் ரோப் கார் சேவையை தொடங்க முடிவு செய்துள்ளது. அதன்படி உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் ரோப் கார் சேவையை கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக மகாராஷ்ட்ராவில் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரோப் கார் சேவை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக சென்னை மெரினா கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் கடற்கரை 4.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரோப் கார் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் தேசிய நெடுஞ்சாலைகள் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் மூலமாக இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 10 இடங்களில் ரோப் கார் சேவை வழங்குவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
மேலும் ரோப் கார் சேவைக்காக புவிசார் தொழில்நுட்பம் உள்ளடக்கிய பல்வேறு பொறியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. கடற்கரையில் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சென்னை மட்டுமல்லாமல் மெரினா கடற்கரைக்கு வருகை தரும் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்களிடையேயும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.