Tamil Nadu Corona Management: மாற்றப்படும் கொரோனா மரணங்கள்; இறப்பு சான்றிதழை ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு
நாடு முழுவதும், கொரோனா இறப்புகள் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. துல்லியமான அறிக்கைகள் மட்டுமே நிவாரணம் வழங்க உதவும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் சரியாக கிடைக்காததால், அது தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பிக்கக் கோரி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல நேரங்களில் நிமோனியா, சிறுநீரகப் பாதிப்பு, மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவது உண்டு. ஆனால், அவர்களின் இறப்புக்கு அந்த நோய்கள் காரணமல்ல. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதன் பின்விளைவாகத் தான் அவர்களுக்கு பிற நோய்கள் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். அதனால் அவர்கள் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்ததாக கருதப்படாமல், மாறாக பிற நோய்களால் அவர்கள் உயிரிழந்து விட்டதாக சான்றளிக்கப்படுகிறது.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும் என்று தமிழக அரசும், அந்தக் குழந்தைகளின் 23-ஆவது வயதில் ரூ.10 லட்சம் கிடைக்கும் வகையில் வைப்பீடு செய்யப்படும் என்று மத்திய அரசும் அறிவித்துள்ளன. இவை தவிர மாத நிதியுதவி, கல்வி உதவி உள்ளிட்ட மேலும் பல உதவிகளும் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள இத்தகைய உதவிகளை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் பெற வேண்டுமானால், அவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலில் தான் உயிரிழந்ததாக இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிமோனியா காய்ச்சல், மாரடைப்பு போன்ற காரணங்களால் உயிரிழந்ததாக சான்றிதழ் அளிக்கப்பட்டிருப்பதால் அவர்களின் குடும்பத்தினரால் மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீட்டை பெற முடியாது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பல குடும்பங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண உதவி தொகைகளை பெற முடியவில்லை. இறப்புக்கான காரணத்தை, மருத்துவமனை பதிவுகளில் கொரோனா என்று குறிப்பிடப்படவில்லை. அதற்கு பதிலாக நுரையீரல் அல்லது இதய நோய்கள் காட்டப்பட்டுள்ளதே இதற்கு காரணம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Coronavirus News Updates: நான்காவது நாளாக குறைந்து ஆறுதல் தரும் கொரோனா எண்ணிக்கை
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நாடு முழுவதும், கொரோனா இறப்புகள் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. துல்லியமான அறிக்கைகள் மட்டுமே நிவாரணம் வழங்க உதவும். எனவே, தமிழக அரசு இது தொடர்பாக நிபுணர்களை கொண்டு ஆய்வு நடத்தி அதிகாரப்பூர்வ அறிக்கையை வரும் 28ஆம் தேதி சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
முன்னதாக, ‘தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தாக்கி உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழில் இறப்புக்கான காரணம் சரியாக குறிப்பிடப்படாததால், அவர்களின் குடும்பங்கள் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு ஆளாகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசின் உதவிகளை பெற்றுத் தருவதற்கான ஆவணத்தை தயாரிப்பதில் காட்டப்படும் அலட்சியம் அல்லது தவறு கண்டிக்கத்தக்கது’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’ நம்மாழ்வார் வழியில் சிவகங்கை விவசாயி !