மேலும் அறிய
Advertisement
Sivagangai Sivaraman: 'கலப்படம் இல்லாத பாரம்பரிய நெல்’ நம்மாழ்வார் வழியில் சிவகங்கை விவசாயி !
வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் “உன்னை சுற்றியுள்ள எதுவும் நல்லா இருக்காத போது நீ மட்டும் எப்புடி நல்லா இருக்க முடியும்னு' திருப்பி கேட்டாரு, அந்த வார்த்தை தான் என்னை மாற்றியது.
'ஊருக்கு கடைசி உலகம்பட்டி' என்று சொல்வது செட்டிநாட்டு சொலவடை. 'யாத்தே ஊருக்கு கடைசியா இருக்க, உலகம்பட்டிலைய பொண்னு எடுக்கப் போற'னு கிண்டல் அடிப்பார்களாம். இப்படி கடைக்கோடி கிராமமாக பார்க்கப்படும் உலகம்பட்டி சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த கிராமத்தை சேர்ந்த இளம் விவசாயி சிவராமன் நம்மாழ்வார் வழியிலும், நெல் ஜெயராமன் வழியிலும் இயற்கை விவசாயம் செய்து பல்வேறு விவசாயிகளுக்கு முன்னோடியாக வலம் வருகிறார். சிவகங்கை மாவட்டத்தில் சிறந்த விவசாயிகள் என்ற வரிசை பட்டியல் தேர்வு செய்தால் சிவராமனை தவிர்க்க முடியாது. இரசாயன உரம் போட்ட கைகளை இயற்கை விவசாயம் செய்ய வைத்து வெற்றியடைய செய்துவருகிறார்.
முன்னோடி விவசாயி சிவராமனை சந்திக்க உலகம்பட்டிக்கு சென்றோம்.
" பாரம்பரியமா நாங்க விவசாய குடும்போ. நல்ல சம்சாரியா இருக்கதுதே எங்களுக்கு பெரும. ஒரு சம்சாரிகிட்ட காசு, பணம் இருக்கது மட்டுமில்ல கால்நடையும், விவசாய நிலமும், தானியங்களும், உதவுற பண்பு' இப்படி எல்லாமே வேணும். எங்க தாத்தாவுக முழுக்க முழுக்க இயற்கை விவசாயி. எங்க அப்பா இரசாயன உரங்கள கையில் எடுத்து தோத்துப் போனாரு. அதை மீண்டும் இயற்கை விவசாயத்தில் சாதித்து ஜெயித்துள்ளேன். எங்க அப்பா டிராக்டர வயல்ல போட்டு உழவு ஓட்டுனத பார்த்து சண்டை போட்டு வீட்ட விட்டு கோச்சுக்கிட்டு போனாராம் எங்க தாத்தா கோயில் அழகன். அந்த அளவு தற்சார்பு வாழ்வு முறைய விரும்பிருக்காரு. அந்த குடும்பத்தில் வந்த நானும் இரசாயனத்த கையில் எடுக்கலாமானு தோணி, இயற்கை விவசாயத்திற்கு மாறினேன்.
2002-ல் மானாமதுரையில தனியார் பண்ணையில் ஐயா நம்மாழ்வார் அறிமுகம் கிடைச்சது. அதில் இருந்து கூடுதலா இயற்கை விவசாயத்த நேசிக்க ஆரம்பிச்சேன். 2 ஏக்கர் சொந்த இடத்தில் பயிர்கள விளைவிச்சேன். விவசாயம் செய்ய ஆரம்பத்தில் பொருளாதாரம் இல்லாத சூழல் காரணமாக வெளிநாடு சென்று சம்பாரிச்சேன். பணம் சம்பாரிக்க சென்றாலும் விவசாயத்தின் மீது ஆர்வம் குறையல. இணையமும், புத்தகமும் எனக்கு இயற்கை விவசாயத்தப் பத்தி சொல்லிக் கொடுத்துக்கிட்டே இருந்துச்சு. தொடர்ந்து நம்மாழ்வார் ஐயாவுடன் தொடர்பில் தான் இருந்தே. ஒரு நாள் போனில் பேசும் போது 'நல்லா இருக்கியா சிவராமானு' என்ன கேட்டார் நானும் நல்லா இருக்கேனு பதில் கொடுத்தேன். 'உன்னை சுற்றியுள்ள எதுவும் நல்லா இருக்காத போது நீ மட்டும் எப்புடி நல்லா இருக்க முடியும்னு' திருப்பி கேட்டாரு. எனக்கு ஒன்னும் புரியல 'வெளிநாட்டு வாழ்க்கைய விட்டுட்டு ஊர்ல வந்து விவசாயம் பண்ணு அப்ப தான் சுத்தி இருக்கவங்களையும் நல்லா வச்சுக்க முடியும்னு' சுருக்குனு சொன்னாரு. அந்த வார்த்தை உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுத்தது. ஆனால் ஊருக்கு வந்து மீண்டும் நம்மாழ்வார் ஐயாவ உயிரோட பார்க்க முடியல. இப்பவும் அவர் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் நெல் மணி மாதிரி என் காதுல கேட்டுக்கிட்டு இருக்கு.
வெளிநாட்டில இருந்து வந்த பின் பாரம்பரிய நெல்லான மாப்பிள்ளை சம்பாவ போட்டுப்பார்த்தேன். 36 செண்ட்ல மூடைக்கு 75கிலோ மேனி 16 மூடை ஈல்டு எடுத்தேன். அந்த வெற்றி தான் அடுத்த அடுத்த கட்டத்துக்கு என்ன நகர்த்துச்சு. நெல் ஜெயராமன் நடத்திய திருவிழால பாரம்பரிய ரகங்கள வாங்கிட்டு வந்து பயிர் செஞ்சு அதுலையும் நல்ல மகசூல் எடுத்தேன். இழுப்பை பூ சம்பா, சீரக சம்பா, தூய மல்லி இதுகல தொடர்ந்து செஞ்சுக்கிட்டே வந்தேன். தொடர்ந்து 2017-ல் சொந்த நிலம் போக குத்தகை நிலமும் வாங்கி விவசாயம் செஞ்சே அதற்காக கூடுதலா 16 ரகம் பாரம்பரிய நெல் விதைகளை விவசாயம் செஞ்சேன். இப்ப 11 ஏக்கர் விவசாயம் பன்றே. கடலை, கரும்பு, வெள்ளரி, தக்காளி, கீரை, காய்கறி வகைகளையும் பயிர் எதையாவது விவசாயம் பண்ணி 3 போகம் விளைய வைக்கிறேன். நெல் விவசாயம் தான் எனக்கு பிரதானம் அதில் கலப்பு ஏற்படக்கூடாதுனு முறையா செய்றேன்.
இயந்திர அறுவையால் கலப்பு ஏற்படும் என்பதால் அதை பயன்படுத்துவதில்லை கை அறுவை தான். என்னுடைய நெல்லை தற்போது பிரதானமா விதைக்கு தான் கொடுக்கிறேன். தமிழ்நாடு முழுக்க கடந்த வருசம் மட்டும் 555 பேருக்கு விதை கொடுத்துருக்கேன். என்னிடம் இப்ப சம்பா ரகத்தில காட்டு யானம், கரடம் சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, செம்புழுதிச் சம்பா, ஆத்தூர் கிச்சடிச்சம்பா, சீரகச்சம்பா, பர்மா கவுணி, சிகப்புக்கவுணி, கருப்புக்கவுணி, சொர்ண மசூரி, குல வாழை, தங்க சம்பானு ஏகப்பட்ட பாரம்பரிய ரக விதை இருக்கு. குறுவைய பொறுத்தவர கருங்குறுவை, சண்டிகர், பூங்காரு, குள்ளக்கார், சின்னார், ஆறாம் குறுவை உள்ளிட்டவை இருக்கு. ஒவ்வொன்னும் முறையா உற்பத்தி செஞ்சுகிட்டு இருக்கே.
2019-ல் தமிழ்நாடு அரசு நடத்திய நெல் அறுவடை போட்டியில தமிழ்நாடு அளவில் 3வது இடம் பிடிச்சு எம்.ஜி.ஆர் விருதுக்கு தேர்வாகி வென்றுள்ளேன். அதற்காக விருதும், 50ஆயிரம் பணமும் அரசு சில மாதங்களுக்கு முன் தான் வழங்குச்சு. அந்த போட்டியில் 1 ஹெக்டேர் அளவு ஆத்தூர் கிச்சடி சம்பா போட்டு அதில் 7 டன் 945 கிலோ ஈல்டு எடுத்தேன். என்னுடைய ஒவ்வொரு முறை நடவிலும் நட்டு மூன்றாவது நாள் வயலில் தண்ணீர் விடப்படும் வாமடையில் உரக்குழி அமைத்து அழுகும் இலை தழை ,சோத்துக் கத்தாலை, பிரண்டை, பனம் பழம், பசுஞ்சாணி, வேம்பம்புண்ணாக்கு உள்ளிட்டவைகளை துணிப்பையில் கட்டி குழியில் அலசிவிட வேண்டுவேன். இதனால் பயிருக்கு செல்லும் நீர் ஆரோக்கியமான தண்ணீராக மாறி சீரான வளர்ச்சியைக் கொடுத்து கிளை வெடிக்க செய்யவைக்கும், மேலும் வேர்ப்பூச்சி தாக்குதலையும் கட்டுப்படுத்தும்.
கடந்தாண்டு கருங்குறுவை அதிகளவு பயிர் செய்தேன். 110 நாள் வயது பயிர் அது. மூன்றரை அடி வரை வளரக்கூடியது. ஒரு மூடை 75 கிலோ வீதம் ஏக்கருக்கு 32 மூடை எடுத்தேன். அதற்கு 3 கிலோ விதை நெல் எடுத்து நீர் நாற்று பாவி 16 வது நாள் நடவேண்டும். நடவு அன்று ஏக்கருக்கு 16 பாக்கெட் அசோஸ் ஸ்பைரில்லத்தை மணல் அல்லது குப்பையுடன் கலந்து பரம்பு அடிச்சதற்கு பின் தூவ வேண்டும். பின் 1க்கு முக்கால் என்ற அளவில் வரிசை நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 16 வது நாள் மற்றும் 30வது நாள் பஞ்சகவ்யா இலை வழியாக ஸ்பிரே செய்ய வேண்டும். 300 மில்லி பஞ்சகவ்யாவுடன் 10 லிட்டர் தண்ணீர் சேர்த்து அடிக்க வேண்டும்.
நடவு செய்த 22 வது நாள் கலை எடுத்த பின் மண்புழு உரம், வேப்பம்புண்ணாக்கு, அசோலா ஸ்பைரில்லம் மூன்றையும் கலந்து தூவவேண்டும். அதற்கு பின் மூலிகை பூச்சிவிரட்டியை மாட்டுக் கோமியத்துடன் ஊறவைத்து தெளிக்க வேண்டும். 45 டூ 50வது நாளில் 10 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி மீன் அமிலம் கலந்து பயிர்களுக்கு தெளிக்க வேண்டும். நெல் பறியும் போது பால் உறிஞ்சும் பூச்சி, தண்டு துளைப்பான், நாவாய் பூச்சி உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்த இஞ்சி, பூண்டுக் கரைசலை 16 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். இப்படி தேவையான நேரத்தில் மட்டும் பார்த்தால் போதுமானது பெரியளவு எந்த நோயும் தாக்காது. மண்ணில் வளத்தை பெருக்கினால் போதும் விவசாயத்தில் கவலைப்பட தேவையில்லை. நாம் இயற்கை விவசாயம் செய்யும் போது தட்டான், வாழ்குருவி, ஆந்தை,கரிச்சான் உள்ளிட்ட பறவைகள் வயலுக்கு நன்மை பயக்கும். பாரம்பரிய வகை நெற்பயிர்கள் விவசாயிக்கு முழுக்க, முழுக்க நன்மை தரும் பயப்படத் தேவையில்லை.
கருங்குறுவை ரகத்தில் 1 ஏக்கருக்கு கிடைத்த லாபம் ?
ஏக்கருக்கு 37 மூடை கிடைக்கும் ஒரு மூடை 1600 என்றால் ரூ.59200 கிடைக்கும் இதில்
உழவுக் கூலி, விதைக்கு வரப்பு வெட்ட, நடவு, உரம், கலை எடுப்பு, அறுவடை என எல்லா செலவும் போக ரூ.45000 கிடைக்கும் அதுபோக நீளமான வைக்கோல் என்பதால் குறைந்தபட்சம் ரூ.15000 வரை விற்பனை செய்ய முடியும். எனவே ஏக்கருக்கு சராசரியாக 60 ஆயிரம் வரை லாபம் எடுக்க முடியும். என்னுடைய நிலத்தில் தேவையான இடுபொருள் மற்றும் வேலைகளை நானே செய்துகொள்வதால் கூடுதல் லாபம் கிடைக்கிறது. என்னிடம் 20க்கும் மேற்பட்ட இளம் விவசாயிகள் தங்கி பயிற்சி சென்றுள்ளனர். அவர்கள் விவசாயம் செய்துகொண்டு அவர்கள் வசிக்கும் பகுதியில் விவசாய ஆலோசனைகளையும் செய்துவருகின்றனர். என் விவசாயத்தை பார்த்து பல விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறி பாரம்பரிய ரகங்களை பயிர் செய்து வருகின்றனர்.
அவர்களுக்கு இலவச ஆலோசனை வழங்கிவருகிறேன். தற்போது நான் நெல் மூடையை நேரடியாக உணவிற்கு கொடுப்பதில்லை. பல விவசாயிகள் பயன்பெற வேண்டும் என விதையாக படி ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்கிறேன். தினமும் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொலைபேசி வாயிலாக பேசி என்னிடம் ஆலோசனையும் பெற்றுவருகின்றனர். இயக்குநர் வெற்றிமாறன், பார்த்திபன் என பல சினிமா பிரபலங்களுக்கு விவசாய ஆலோசனைகளும் வழங்கிவருகிறேன்.
என்னுடைய நெல்லில் கலப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என முனைப்புடன் வேலை செய்கிறேன். அதனால் மகரந்தச்சேர்க்கை காரணமாக காற்றில் கலப்பு ஏற்பட்டுவிடக் கூடாதென்று அருகருகே ஒத்த வயது பயிர்களை பயிர் செய்வதில்லை. என்னிடம் காங்கேயம், மணப்பாறை, புதுக்கோட்டை உள்ளிட்ட ரக நாட்டுமாடு 13 உள்ளன. இதைத் தான் என்னுடைய விவசாயத்திற்கு பயன்படுத்துகிறேன். எங்கள் பகுதி விவசாயிகளை இணைத்து தொடர்ந்து நெல் திருவிழாவும் நடத்திவருகிறோம்" என்றார் மகிழ்ச்சியாக.
இதை மிஸ் பண்ணீராதீங்க பிளீஸ் -ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விழுப்புரம்
இந்தியா
கிரிக்கெட்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion