Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Vengaivayal: வேங்கைவயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் என்பது தொடர்பான அறிக்கையை, தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

Vengaivayal: வேங்கைவயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் என்பது? தொடர்பாக 750 நாட்களுக்குப் பிறகு தகவல் வெளியாகியுள்ளது.
வேங்கைவயல் குற்றவாளிகள் யார்?
வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் மாநில அளவில் பெரும் பேசுபொருளானது. இந்நிலையில், சம்பவம் நடந்த 750 நாட்களுக்குப் பிறகு சிபிசிஐடி விசாரணையை முடித்து புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதன்படி, முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குற்றம் புரிந்துள்ளதாக மூன்று பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக ஜனவரி 20ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முரளிராஜா ஆயுதப்படையில் பணியாற்றி வந்தவர் எனவும், அவர் தவறான தகவல்களை பரப்பி வந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அறிக்கையை மனுவாக தாக்கல் செய்யும்படி, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு ஆண்டுகளாக விசாரணை:
புதுக்கோட்டை முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
குடிநீர் தொட்டியில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. மேலும் முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயல், இறையூர் மற்றும் பக்கத்து கிராமங்களை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 46 பேர், பிற சமூகத்தை சேர்ந்த 49 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இறையூர் மற்றும் வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த 11 நபர்களிடம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனை செய்ய ரத்த மாதிரி எடுக்க வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. நீண்ட இழுபறிக்குப் பிறகு டி.என்.ஏ., பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முடிவுக்கு வந்த பிரச்னை?
இதனிடையே, இரண்டு ஆண்டுகளாகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என, ஆளும் திமுக மீது கடும் குற்றச்சாட்டுகள் நிலவியது. வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. அண்மையில் இரண்டு ஆண்டுகளாகியும் குற்றவாளியை கண்டுபிடிக்காத போலீசாரை விமர்சித்து, வேங்கைவயல் மக்கள் பேனர் ஒன்றையும் அப்பகுதியில் வைத்து இருந்தனர். அதோடு, பரந்தூரை தொடர்ந்து விரைவில் தவெக தலைவர் விஜய் வேங்கைவயலுக்கும் சென்று பொதுமக்களை சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தான், சுமார் 750 நாட்களுக்குப் பின், குற்றவாளிகள் தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது.





















