Chennai rain: சென்னையில் தொடரும் சாரல் மழை: சிரமத்துக்குள்ளாகும் பயணிகள்..
சென்னையில் இன்று காலை முதல் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இன்று காலை முதலே, மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. வரும் 24 ஆம் தேதி தீபாவளியொட்டி, சென்னையிலிருக்கும் மக்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
விடுமுறை ஆரம்பம்:
இன்றிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று இரவிலிருந்து பலரும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆரம்பித்தனர். இதனால் நேற்று, பெருங்களத்தூர் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் பலர் காலை பொழுதிலிருந்து இரு சக்கர வாகனம், கார் மற்றும் பேருந்துகளிலிருந்து சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் காலை பொழுதிலிருந்து, விட்டு விட்டு சாரல் மழை பொழிந்து வருவதால், பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
நேற்று இரவு முதல் இன்று மதியம் 3 மணி வரை சிறப்பு பேருந்துகளில் 2.43 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு - சென்னை pic.twitter.com/bE64e7PeF1
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 22, 2022
சென்னை வானிலை:
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
இன்று மழை:
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 22, 2022
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
உசிலம்பட்டி, சாத்தூர், சத்தியமங்கலம் தலா 6 செ.மீ, குலசேகரப்பட்டினம், விரகனூர் அணை (மதுரை) தலா 4, வேப்பூர் (கடலூர்), அருப்புக்கோட்டை, வைப்பார் (தூத்துக்குடி), திருச்செங்கோடு (நாமக்கல்), மதுரை விமான நிலையம், கோவிலங்குளம் (விருதுநகர்), ஆண்டிபட்டி (மதுரை), கீழச்செருவை (கடலூர்), மேமாத்தூர் (கடலூர்) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மேலும் தீபாவளி பண்டிகையான 24.10.2022 மற்றும் 25.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.