Awareness video | கொரோனா விழிப்புணர்வு - மாளவிகா மோகனனின் கேள்வியும் டாக்டரின் பதிலும்!
கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக நடிகை மாளவிகா மோகனன் மற்றும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் டீன் மருத்துவர் ஜெயந்தி ரங்கராஜன் ஆகியோர் ஒரு கலந்துரையாடலை நடத்தியுள்ளனர்
கொரோனா பெருந்தொற்று தமிழ்நாட்டில் மிகவும் தீவிரம் அடைந்த வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது. அத்துடன் மக்களுக்கு நோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வையும் சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் நடிகை மாளவிகா மோகனன் மற்றும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் டீன் மருத்துவர் ஜெயந்தி ரங்கராஜன் ஆகியோர் ஒரு கலந்துரையாடலை நடத்தியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோவை சென்னை மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், "கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் உடனடியாக என்ன செய்ய வேண்டும்" என்ற கேள்வியை மருத்துவரிடம் மாளவிகா எழுப்புகிறார். இந்த கேள்விக்கு மருத்துவர் ஜெயந்தி ரங்கராஜன் தனது பதிலை அளிக்கிறார். அதில், "முதலில் கொரோனா தொற்று உறுதி என்று வந்தால் உடனே பயப்பட வேண்டாம். அத்துடன் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று நினைக்க வேண்டாம்.
ஏனென்றால், 90-95 சதவிகிதம் பேருக்கு இந்த நோய் சிறிய அறிகுறிகள் அல்லது அறிகுறிகள் இல்லாமல் தானாக சரியாகிவிடும். அவர்கள் தங்களை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தி கொண்டால் போதும். அப்போது அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய் தொற்று பரவாமல் இருக்கும். மேலும் 5-10 சதவிகித மக்களுக்கு மட்டும் தான் நோய் தொற்று மிகவும் தீவிரமாக இருக்கும்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?
— Greater Chennai Corporation (@chennaicorp) May 29, 2021
நடிகை மாளவிகா மோகனனின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் Dr. ஜெயந்தி ரங்கராஜன் (டீன், ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை).@MalavikaM_ pic.twitter.com/E65lUs9XiU
அவர்களுக்கு இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தொடர்ந்து இருக்கலாம். அவர்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளலாம். வீட்டில் தனிமையில் இருக்கும் போதும் தங்களுடைய ஆக்சிஜன் அளவை பல்ஸ் ஆக்சி மீட்டர் உதவியுடன் பரிசோதித்து கொண்டே இருக்க வேண்டும். உடலில் ஆக்சிஜன் அளவு 92 கீழாக சென்றால் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும்.
மேலும் மிகவும் குறைவான 2-4% பேருக்கு மட்டும் மிகவும் தீவிர சிகிச்சை தேவைப்படும். உதாரணமாக இவர்களுக்கு மூச்சு திணறல், நெஞ்சு பகுதியில் வலி ஆகியவை இருந்தால் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வரவேண்டும். அவர்கள் விரைவாக வந்தால் சிகிச்சை பெற்று நலம் பெறலாம்"எனத் தெரிவித்துள்ளார்.