Chengalpattu Encounter: ''பிடிக்க போனோம்.. நாட்டு வெடிகுண்டு வீசினாங்க'' - செங்கல்பட்டு என்கவுண்டரில் நடந்தது என்ன?
மொய்தீன் மற்றும் தினேஷை பிடிக்க செல்கையில் அவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தியும், அரிவாளை பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தினர்
இரட்டைக்கொலை
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நகர காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றில் கையெழுத்து போட்டுவிட்டு, செங்கல்பட்டு கே.தெரு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் டீ குடிக்க சென்றார்.
அப்போது ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் கார்த்திக் மீது நாட்டு வெடிகுண்டு வீசியும் அவரை கத்தியால் சரமாரியாக வெட்டியும் கொன்றுவிட்டு தப்பியோடியது. இந்தக் கொலையோடு நிறுத்தாமல், செங்கல்பட்டு மார்க்கெட் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் சீனுவாசன் என்பவரது மகன் மகேஷையும் ( 22) அந்தக் கும்பல் கொன்றது.
இருவரது உடல்களையும் மீட்ட செங்கல்பட்டு நகர காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். அதனையடுத்து கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கும்பல் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அதுமட்டுமின்றி இரட்டை கொலையை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம கும்பல் குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்தக் கும்பல் பயன்படுத்திய நாட்டு வெடிகுண்டுகளை வல்லுநர்கள் உதவியுடன் அப்புறப்படுத்தி, விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு மூன்று நபர்களையும் கைது செய்ய தனிப்படையும் அமைக்கப்பட்டது.
என்கவுண்டர்:
இந்நிலையில் இந்த இரட்டை கொலை தொடர்பாக ரவுடிகள் மொய்தீன் மற்றும் தினேஷ் ஆகியோர் மாமண்டூர் பாலாறு அருகே காவல் துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் இரண்டு பேரும் உயிரிழந்தனர். அதேசமயம் ரவுடிகள் நடத்திய தாக்குதலில் காவல் துறையினர் இரண்டு பேரும் காயமடைந்துள்ளனர்.
நடந்தது என்ன?
நேற்று நடந்த இரட்டை கொலை தொடர்பாக மொய்தீன் மற்றும் தினேஷை பிடிக்க செல்கையில் அவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தியும், அரிவாளை பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தினர். அப்போது தற்காப்புக்காக காவல் துறையினர் சுட்டதில் இரண்டு ரவுடிகளும் உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்த இரண்டு காவலர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Chengalpattu Encounter: நேற்று இருவர் கொலை.. இன்று இருவர் என்கவுண்டர் - பரபரப்பில் செங்கல்பட்டு!