பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வழங்கிய காசோலைகள் ‛பவுன்ஸ்’
தமிழகத்தை பதபதைக்க வைத்த பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட காசோலைகள் பணமின்றி ‛பவுன்ஸ்’ ஆனதாக புகார் எழுந்துள்ளது.
சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயரிழந்தவர்களின் 25 குடும்பங்களுக்கு ஆலை நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதிக்கான காசோலையில் பணம் இல்லாததால் தொழிலாளர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குடும்பத்தில் முக்கிய நபரை இழந்த நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக அரசு முயற்சியில் ஆலை நிர்வாகம் வழங்கிய காசோலையை மாற்றுவதற்காக வங்கிச் சென்ற போது தான், அதில் பணம் இல்லை என்பது தெரியவந்தது. இதுவரை 25 பேருக்கு காசோலை வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒருவருக்கு மட்டுமே பணம் கிடைத்துள்ளதாகவும் மற்ற 24 பேரின் காசோலையில் பணம் இல்லாததால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது தொடர்பாக சம்மந்தப்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்களை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் கேட்ட போது, அவர்கள் தரப்பிலும் முறையான பதில் இல்லை. அதிகாரிகள் தரப்பில் முயற்சி மேற்கொண்டும் அதுவும் உதவவில்லை. இதனால் மனமுடைந்த பாதிக்கப்பட்ட மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் முறையிட முடிவு செய்தனர்.
நிவாரணம் வழங்குவதாக கூறி ஆலை நிர்வாகம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள உயிரிழந்த பட்டாசு தொழிலாளர்களின் குடும்பத்தினர், மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் தங்கள் புகாரை மனுவாக அளித்தனர்.
புகார் மனுவில், ‛நிவாரணம் வழங்குவதாக கூறி ஆலை நிர்வாகள் தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ள அவர்கள், உரிய நடவடிக்கை எடுத்து நிவாரண உதவி தொகையை பெற்றுத்தர வேண்டும்,’ என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். அதோடு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு மத்திய அரசு அறிவித்த தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண தொகை இதுவரை ஒருவருக்கு கூட கிடைக்கவில்லை என்றும், மாநில அரசு அறிவித்த தலா 3 லட்சம் நிவாரண தொகை இதுவரை 17 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும்,’ வருத்தம் தெரிவித்த அவர்கள், 27 குடும்பத்தினரும் குடும்ப தலைவர்களை இழந்து நிற்கதியாக நிற்கும் நிலையில் வாழ்வாதரத்திற்கு உதவி செய்யும் வகையில் அனைவருக்கும் முறையான நிவாரண உதவித்தொகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து ஆட்சியர் கன்னணினிடம் கேட்டபோது, ‛‛தற்போது தான் இப்பிரச்னை தனது கவனத்திற்கு வந்துள்ளதாகவும், உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட அனைவருக்கும் நிவாரண தொகை முறையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என உறுதியளித்தார்.
தமிழகத்தை உலுக்கிய பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட காசோலைகள் பவுன்ஸ் ஆன நிலையில் சம்பவம் நடந்த போது காட்டிய அக்கறையை அதன் பின் அதிகாரிகள் காட்டவில்லை என்கிற வருத்தம் பாதிக்கப்பட்ட மக்களிடம் உள்ளது. உடனே மத்திய, மாநில அரசுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேர வேண்டிய உதவித்தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.