முந்திரி தொழிற்சாலை ஊழியர் உயிரிழந்த சம்பவம் - கடலூர் திமுக எம்.பி மீது வழக்குப்பதிவு
கடலூர் எம்பி டி.ஆர்.வி.ரமேஷ், இவரது உதவியாளர் நடராஜன், முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல், அல்லா பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், வினோத் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு
கடலூர் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் உள்ளது. இந்த தொழிற்சாலையில் மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு (55) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 19ஆம் தேதி கோவிந்தராசு மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக மர்ம மரணம் என்று காடாம்புலியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின் கோவிந்தராஜின் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் கோவிந்தராஜின் உடல் பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் வைத்து தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர், பின் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி இறந்த கோவிந்தராஜின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் நான்கு பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது பின் குடும்பத்தினரால் அடக்கம் செய்யப்பட்டது.
அதற்குப்பின் கடந்த மாத இறுதியில் இந்த வழக்கானது சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்படுவதாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார், அதன்படி வழக்கானது சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டு ADSP கோமதி தலைமையில் 5 ஆய்வாளர்கள் கொண்ட குழு பண்ருட்டியில் கடந்த மாதம் 28 ஆம் தேதி விசாரணையை தொடங்கினர். இதில் முதற்கட்டமாக கோவிந்தராஜ் அவர்களின் மகன் மற்றும் காடாம்புலியூர் காவல் ஆய்வாளர்(பொறுப்பு) நந்தகுமார், சிறப்பு துணை ஆய்வாளர் ஜெயக்குமார், காவலர் பாஸ்கர், உள்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் காடாம்புலியூர் காவல் துறை சார்பில் நடத்தப்பட்ட விசாரணையின் குற்றப்பத்திரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது, அதற்கு பின் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட இறந்த கோவிந்தராஜ் அவர்களின் பிரேத பரிசோதனை மற்றும் காடம்புலியூர் காவல் நிலையத்தில் காயங்களுடன் இருக்கும் கோவிந்தராஜின் புகைப்படம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கடலூர் எம்பி ரமேஷ் அவர்களின் முந்திரி தொழிற்சாலை பணிபுரியும் ஊழியர்கள் 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணைக்கு பின்னர் கடலூர் எம்பி டி.ஆர்.வி.ரமேஷ், இவரது உதவியாளர் நடராஜன், முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல், அல்லா பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், வினோத் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கடலூர் எம்.பி டி.ஆர்.வி ரமேஷை தவிர்த்து மற்ற 5 பேரையும் நேற்று காலை கடலூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து வந்து நள்ளிரவு 2 மணி வரை விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இந்த வழக்கில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷ் உள்பட மேலும் 3 பேரிடம் விசாரணை நடத்த இருப்பதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.