Erode East Bypoll: நெருங்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது திடீர் வழக்குப்பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4 ஆம் தேதி மரணமடைந்தார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என அரசியல் கட்சிகள் கடும் போட்டிக்கு மத்தியில் களமிறங்கியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. இதில் திமுக கூட்டணி சார்பில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அதிமுக சார்பில் அந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசுவும் போட்டியிடுகின்றனர். அதேபோல் தமிழர் கட்சி சார்பாக மேனகா, தேமுதிக கட்சி சார்பாக ஆனந்தும் களம் காண்கின்றனர்.
சுயேட்சையோடு சேர்த்து மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் போட்டிப்போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். எந்த பக்கம் திரும்பினாலும் அரசியல் கட்சியினர் தலைகள் தான் தென்படுகிறது. வீடு வீடாக சென்று போட்டிப்போட்டுக் கொண்டு வித்தியாசமான ஸ்டைலில் கட்சியினர் ஓட்டு சேகரித்து வருகின்றனர். மேலும் பணம், ஆடைகள், வெள்ளிக் கொலுசு, பரிசுப் பொருட்கள் என ஒருபக்கம் வாக்காளரை கவர அரசியல் கட்சியினர் முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டுகளும், அது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பரிசுப் பொருட்கள் வழங்கியது தொடர்பாக 2 வழக்குகள் உட்பட இதுவரை 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் கூறியுள்ளார். இப்படியான சூழலில் பிரச்சாரம் ஓய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் முக்கிய அரசியல் தலைவர்கள் வருகையால் ஈரோடு கிழக்கு விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 20 ஆம் தேதி அனுமதியின்றி ஆலமரத் தெருவில் பிரச்சாரம் மேற்கொண்டதாக மேனகா உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 3500 பேர் மீது வழக்குப்பதிவு - கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த ராணுவ வீரர் கொலையை கண்டித்து நேற்று மாலை பாஜகவினர் பேரணி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.