Cabinet Meeting: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்.. அமைச்சரவையில் மாற்றமா?
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடக்கிறது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி வருகின்ற 7ம் தேதி பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவு செய்கிறது. தொடர்ந்து மூன்றாம் ஆண்டிலும் அடியெடுத்து வைக்கிறது. இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடக்கிறது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து ஆலோசனை:
இன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்து, தமிழ்நாட்டில் வருகின்ற ஜனவரி மாதம் 10 மற்றும் 11ம் தேதி நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக கடந்த பட்ஜெட்டில் 100 கோடி ஒதுக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதன் மூலம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக தமிழ்நாட்டில் முதலீடுகளை கவர முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் இந்த மாதம் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதற்கும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட இருக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் புதியதாக தொழில் தொடங்க அனுமதி கேட்டுள்ள நிறுவனங்கள் பற்றியும் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.
அமைச்சர்கள் மாற்றமா..?
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் சில மாற்றங்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, ஒரு சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும், ஒரு சில எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர்களுக்கு பதவி வழங்கப்படுவது குறித்து இன்றைய அமைச்சரவையில் முடிவெடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. (இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை)
ஏபிபியின் கணிப்பு படி, புதியதாக டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், டாக்டர் எழிலன், அப்துல் வஹாப், இனிகோ இருதயராஜ், தமிழரசி, காதர் பாட்சா முத்துராமலிங்கம், ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் - அமைச்சர் பழனிவேல் சந்திப்பு ஏன்..?
பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து அவர் விளக்கமளித்தும், ஆடியோ வெளியிட்ட அண்ணாமலை மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என தொடர்ந்து கேள்வி எழுந்தது.
இந்த சூழலில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின் வீட்டில் அமைச்சர் பிடிஆர் சந்தித்தார். இந்த சந்திப்பு அரை மணிநேரம் கூட இல்லை என்றாலும், ஆடியோ விவகாரம் தொடர்பாகதான் இந்த சந்திப்பு என்று கூறப்பட்டது. ஆனால், இது வழக்கமான சந்திப்பு என்றே திமுக வட்டாரங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.