BJP Annamalai:ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!
K. Annamalai: அதிமுகவை மக்கள் நிராகரித்துவிட்டனர்;அதுதான் தேர்தல் தரும் பாடம் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
”ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்; திமுகவினர் என் மீது கை வைக்கட்டும்.” என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை தேர்தல் முடிவுகள், அதிமுக- பாஜக கூட்டணி உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
அப்பாவி ஆட்டை விட்டுவிடுங்கள்:
ஆடு வெட்டப்பட்டு அதன் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படுவது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,”நடுவெளியில் ஆட்டை வெட்டுவது, கொடூரமாக அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்கலாம். வெட்டுவதாக இருந்தால் என்மீது கை வைக்கலாம். திமுக-காரனுக்கு அவ்வளவு கோபம் இருந்தால், வாய் பேச முடியாத ஆட்டை விட்டுவிடுங்கள். நான் கோயம்புத்தூரில்தான் இருக்க போகிறேன். இதுதான் என்னுடைய ஊர். கரூர் அருகில்தான் நான் விவசாயம் பார்த்துகொண்டிருக்கிறேன். இந்தக் கட்சியின் தொண்டனாக இருக்கிறேன். நான் எங்கு இருக்கிறேன் என்று எல்லாருக்கும் தெரியும். அண்ணாமலை மீது கைவைக்க வேண்டும் என்று ஆசையிருந்தால் என் மீது கை வையுங்க. அப்பாவி ஆட்டை விட்டுவிடுங்கள்! வாய் பேசாத ஆட்டை நடுரோட்டில் தலையை வெட்டி, இரத்தம் வெளிவருவதை ஏன் படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகிறீர்கள்? இதெல்லாம் தேவையில்லாத வேலை.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி பிரிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என்று எஸ்.பி. வேலுமணியின் கருத்து பற்றி அவரிடம் கேட்டதற்கு,” எடப்பாடி பழனிசாமி வேலுமணிக்கு இடையே உட்கட்சி பிரச்சனை இருப்பது போல தெரிகிறது. அதிமுகவை மக்கள் நிராகரித்துவிட்டனர். அதுதான் தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு தரும் பாடம்.” கூட்டணி பிரிந்தபிறகு வேறு காரணங்கள் சொன்னார்கள். நிர்பந்திக்கப்பட்டு சில சட்டங்களுக்கு ஆதரவு அளித்தோம் என்று சொன்னார்கள். இப்போது பா..ஜ.க. இருந்திருந்தால் வென்றிருப்போம் என்று சொல்வது உட்கட்சி பிரச்சனை இருப்பதாக தெரிகிறது. அதிமுகவின் அரசியலை வேண்டாம் என்று மக்கள் நினைக்கிறார்கள். சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார்கள். கூட்டணியில் இருக்கும்போது ஒரு பேச்சு. பிரிவிற்கு பிறகு வேறொரு பேச்சு என்றிருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
”நம்முடைய காலம் வரும்!” -தொண்டர்களுக்கு மெசேஜ்
மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் பா.ஜ.க.வின் தோல்விக்கு தொண்டர்களில் ஒருவர் விரலை வெட்டியிருக்கிறார். அது குறித்து பேசிய அவர்,” நம்மக்கான காலம் வரும். நாம் வளர்கின்ற கட்சி. வளர்ந்துகொண்டிருக்கின்றோம். ஒரு பூனை, யானையாக மாற வேண்டுமென்றால் கடினமான பாதையில் பூனை நடந்து செல்ல வேண்டும். அதற்கான காலம் எடுக்கும். அதுவரை கடுமையாக பணி செய்ய வேண்டும். தொண்டர்கள் யாரும் விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம்.” என்று தொண்டர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
”இந்தத் தேர்தலில் வாக்களித்த கோவை மக்களுக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர்களின் வளர்ச்சிக்காக உழைப்பை இரட்டிப்பாக்குவோம். “ நாங்கள் சரியான பாதையில் பயணித்துகொண்டிருப்பதை உறுதியளிக்கும்விதமாக தேர்தல் முடிவுகள் மூலம் தமிழக மக்கள், கோவை மக்கள் செய்தி சொல்லியிருக்கிறார்கள். அது எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. ” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
2026-ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி உறுதி:
2026 சட்டமன்ற தேர்தல் பற்றி பேசுகையில்.” யார் புதிதாக அரசியலுக்கு வந்தாலும் தமிழ்நாடு மக்கள் வாய்ப்பு கொடுப்பாங்க. ஆனால், இப்போது உள்ள நிலையில், எந்த கட்சியும் தனியாக வெற்றி பெற முடியாது. எழுதி வைச்சிக்கோங்க. 2026-ல் கூட்டணி ஆட்சிதான். தமிழக அரசியலில் 2026-ல் முதன்முதலாக கூட்டணி ஆட்சியை நாம் பார்க்கலாம்.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேள்விக்கு பதிலளித்த அவர்.” நான் பேசுவதைப் பார்த்தால் அப்படிதெரிகிறதாண்ணே! அதற்கு இன்னொருவரை கொண்டுவந்துதான் கூட்டணி வைக்க முடியும்.” என்றார். இதன்மூலம் எதிர்வரும் தேர்ததில் அதிமுக - பாஜக இடையெ கூட்டணிக்கு வாய்ப்பிலை என்பதை அவரது பதில் உறுதி செய்துள்ளது.