Minister Sekarbabu: “உப்பு சப்பு இல்லாத சனாதனம்; அண்ணாமலை தூக்கி பிடிக்க காரணம் இதுதான்” - சேகர் பாபு தாக்கு
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் அடுத்த மாதம் 27 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "ஆகமவிதிப்படி நீண்ட நாட்களில் நிலுவையில் உள்ள திருக்கோவில்கள் மற்றும் 12 ஆண்டுகள் நிறைவு பெற்ற திருக்கோவில்கள் ஆகியவற்றிற்கு ஆகமவிதிப்படி குடமுழுக்கு விழா நடத்த வேண்டும் என்று முதல்வரின் உத்தரவுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக 400 ஆண்டுகளுக்குப் பிறகு திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு இந்த ஆட்சியில் தான் குடமுழக்கு விழா நடைபெற்றது. மேலும் நூற்றாண்டுகளுக்கு மேல் குடமுழுக்கு நடைபெறாத கோவில்கள் எல்லாம் குடமுழுக்கு திமுக ஆட்சியில் தான் நடைபெற்றது. குறிப்பாக கோட்டை மாரியம்மன் திருக்கோயில் திருப்பணிகள் காலதாமதம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஆய்வு செய்ததன் அடிப்படையில் 90 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அடுத்து மாதம் 27 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. மேலும் திருத்தேர், தங்கதேர் உள்ளிட்ட நேர்த்தி கடன் செலுத்துவதற்கு அம்மன் வீதி உலாவராத சூழலில் ஏற்பட்டுள்ளது. சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலுக்கு 1993 ஆம் ஆண்டு ராஜகோபுரத்திற்கு குடமுழுக்கு நடைபெற்றது. இந்த திருக்கோவிலுக்கு வரலாற்றில் குடமுழுக்கு நடந்ததற்கு ஆதாரங்கள் இல்லை. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்கோவிலில் திமுக ஆட்சிக்கு பிறகு தான் விரைவுபடுத்தி திருப்பணிகள் நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.
மேலும் "இந்து அறநிலையத்துறை வரலாற்றில், திருக்கோவில்களின் நிலங்கள் பாதுகாப்பு நடவடிக்கை என்றால் இதுவரை 5213 கோடி அளவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்தார். குறிப்பாக திமுக ஆட்சி பொறுப்பை இரண்டு ஆண்டுகாலத்தில் 1044 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்திய குடமுழுக்கு ஆட்சியாக, திமுக ஆட்சி விளங்குவதாக மக்கள் கருதி மகிழ்ச்சி அடைகின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட திருக்கோவில்களில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு 22-23 இந்து சமய அறநிலை துறைக்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் 100 கோடி மானியமாக வழங்கியுள்ளார். எனவே மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட, கிடைப்பதற்கு அறிய பொக்கிஷமான திருக்கோவில்களை பாதுகாக்கும் பணியை இன்றைய மாமன்னர் தமிழக முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார். திமுக ஆட்சியில் தெய்வங்களையும், இறையன்பர்களையும் மகிழ்ச்சியாக வைத்து வருகிறோம். திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டு வருகிறது" என்றும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசியவர், "திமுக ஆட்சி பற்றி குறைசொல்வதற்கு, எந்த பொருளும் கிடைக்கவில்லை. கையில் எதுவும் கிடைக்காததால் பாஜக தலைவர் அண்ணாமலை தவறான வரலாறுகளை உளறி வருகிறார். உடன்கட்டை ஏறுதல் என்பது கற்புகாகதான் என்று அண்ணாமலை குழம்பி போய் கூறி வருகிறார். தமிழகத்தில் பாஜகவை தக்க வைத்துக் கொள்வதற்காக, அண்ணாமலை புரியாமல் திகைத்து கொண்டு இருக்கிறார். ஏதாவது ஒரு பிரச்சினை கையில் எடுக்கவேண்டும் என்பதற்காக உப்பு சப்பு இல்லாத சனாதனத்தை கையில் எடுத்துள்ளார் என்றும் கூறினார். திமுகவை பொருத்தவரை சனாதனத்தை ஏற்றுக் கொண்டவர்களை எதிர்க்கவில்லை, சனாதனத்தில் உள்ள சில கோட்பாடுகளை தான் எதிர்க்கிறோம். திமுக சமத்துவ ஆட்சி சமத்துவத்தை எப்பொழுதும் வலியுறுத்தி வருகிறோம். சமத்துவத்தை வலியுறுத்துகின்ற கடமை உறுதி திமுகவிற்கு தான் இருக்கிறது. இந்து சமயத்துறை வரலாற்றில் எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, பெரிய மாற்றத்தை தமிழக முதல்வர் உருவாக்கி காட்டியுள்ளார். இதனால் தமிழக முதல்வரை இறையன்பர்களும் பக்திமான்களும் போற்றி பாராட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக டிக்கெட்டுகள் கூடுதல் கட்டணத்திற்கு விற்பனை செய்வதாக குற்றச்சாட்டிற்கு படிப்படியாக தடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக முறைகேட்டில் ஈடுபடுபவர்கள், அவர்களாகவே மாற்றிக்கொண்டு ஒருஅளவாக செயல்பட்டால் இதுபோன்று நடைபெறாமல் இருக்கும். இனி இதுபோன்று நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மன்னர்கள் ஆட்சிக்குப் பிறகு, மக்களாட்சி வந்தவுடன் அரசின் கட்டுப்பாட்டில் கோவில்கள் வந்துவிட்டது. சொந்த நிதியிலிருந்து கட்டப்பட்ட ஆலயங்களில் முறைகேடு இருந்தால் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என்றார். சனாதத்தை ஏற்றுக் கொண்டவர்களை எதிர்க்கவில்லை அதில் உள்ள கோட்பாடுகளான பெண்கல்வி மறுப்பு, கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறுதல், குலக்கல்வி உள்ளிட்ட கோட்பாடுகள் தான் எதிர்க்கிறோம், மக்களிடையே உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற பாகுபாடு இருத்தல் கூடாது உள்ளிட்டவைகள் சனாதனத்தில் குறிப்பிட்டுள்ளதால் இதுதான் எதிர்க்கிறோம். சனாதத்தை ஏற்றுக்கொண்ட அனைவரையும் எதிர்க்கவில்லை என்றும் கூறினார். இந்துக்களையும், இந்து மதத்தை மனதார திமுக இயக்கம் தான் வரவேற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் இந்து மதத்தை குற்றம் சுமத்தி குறிப்பிட்டு காட்ட முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். இறை நம்பிக்கை என்பது அவரவர் விருப்பம். அதில் திமுக தலையிட்டது கிடையாது. ஆண்டவனை வழிபடுபவர்களையும், வழிபடாதவர்களையும் ஏற்றுக் கொள்வோம். சமத்துவம் ஒரு அங்கம் தான் திமுக என்பதை அண்ணாமலைக்கு தெரிவிக்க வேண்டும்" என்றும் பேசினார்.