Kavitha Ramu IAS: முதல்வருக்கு கிறிஸ்துவ புத்தகம் கொடுத்த கலெக்டர்! சூடான பாஜக! பதிலுக்கு 'அர்த்தமுள்ள இந்து மதம்'
புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு, முதல்வர் ஸ்டாலினை சமீபத்தில் சந்தித்தபோது கிறிஸ்துவம் தொடர்பான புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
முதல்வர் ஸ்டாலினிடம் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு கிறிஸ்துவம் சார்ந்த புத்தகத்தை பரிசாக வழங்கியதற்கு பாஜக கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளது. அதுமட்டுமட்டுமின்று 'அர்த்தமுள்ள இந்து மதம்' புத்தகத்தை ஆட்சியருக்கு பரிசாகவும் வழங்கியுள்ளது பாஜக.
புத்தகம்..
பொதுவாக முதல்வர்களை சந்திக்கும்போது பொன்னாடைகள் போர்த்துவது வழக்கம்.ஆனால் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் தன்னை சந்திக்க வருபவர்கள் பொன்னாடைகள், பூங்கொத்துகள் கொடுக்க வேண்டாமென கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலாக புத்தகங்களை கொடுக்கலாம் எனக் குறிப்பிட்டார். அதன்பின்னர் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கும் கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் என அனைவருமே புத்தகங்களைத்தான் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு, முதல்வர் ஸ்டாலினை சமீபத்தில் சந்தித்தபோது கிறிஸ்துவம் தொடர்பான புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
‘அறியப்படாத கிறிஸ்துவம்’
‘அறியப்படாத கிறிஸ்துவம்’ என்ற புத்தகத்தை வழங்கிய ஆட்சியர் அது தொடர்பாக தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டார். முதல்வருக்கு கிறிஸ்துவம் சார்ந்த புத்தகத்தை பரிசாக வழங்கியதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்ட பாஜக, ஒரு ஆட்சியர் இப்படியான செயலை செய்திருக்க வேண்டாம் என கருத்து தெரிவித்திருந்தது. தொடர் குற்றச்சாட்டை அடுத்து பேஸ்புக் பதிவை நீக்கினார் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.
இந்நிலையில் இது குறித்து பேஸ்புக்கில் பதிவிட்ட புதுக்கோட்டை மாவட்ட பாஜக தலைவர்
புதுக்கோட்டை பாஜக..
''புதுக்கோட்டை ஆட்சியர் மதிப்பிற்குரிய கவிதா ராமு IAS அவர்கள், மாண்புமிகு முதல்வரின் புதுக்கோட்டை வருகையின் போது வழங்கிய புத்தகம் - 'அறியப்படாத கிருஸ்த்தவம்' இந்த நூலை பரிசாக வழங்கியதன் காரணத்தை மாவட்ட ஆட்சியரது ஃபேஸ்புக் இணைப்பில் காண முடியும். உயர்மட்ட அரசு பொறுப்பில் இருக்கிற, கட்சி மதங்களுக்கு சாராமல் செயல்பட வேண்டிய ஒரு மாவட்டத்தில் ஆட்சியர்,கிருத்துவ மதத்தை முன்னிறுத்துகிறார் வழிமொழிகிறார் தூக்கி பிடிப்பதாக அமைகிறது. திராவிடத்தின் பெருமையை, கிருத்துவ மதத்தின் வளர்ச்சியை மாவட்டத்தின் ஆட்சியர் மதம் சார்ந்து பற்று கொண்டிருப்பதாக இருக்கிறது. இது தான் திராவிட அரசியல் கற்பிக்கும் மதசார்பற்ற அரசியலா?'' எனப் பதிவிட்டிருந்தார்.
மற்றொரு பதிவில்,''புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தமிழக முதல்வருக்கு வழங்கிய அறியப்படாத கிருஸ்துவம் எனும் நூல் குறித்த மாவட்ட ஆட்சியரின் முகநூல் பதிவிற்கு, அது ஒரு தனி மதத்தின் சார்பாக உள்ளதால், தனது ஆட்சேபணையை தெரிவித்தது புதுக்கோட்டை மாவட்ட பாஜக. பாஜக ஆட்சேபணை கருத்துக்களுக்கு இணங்க மாவட்ட ஆட்சியர் தமது ஃபேஸ்புக் பதிவை நீக்கியதற்காக, புதுக்கோட்டை மாவட்ட பாஜக, மாவட்ட ஆட்சியருக்கு, எழுத்து சித்தர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தை வழங்கி நன்றி தெரிவித்தோம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.