அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக மேலிடம்.. தள்ளிப்போகும் DMK Files-3?
DMK Filesஇன் மூன்றாவது பாகத்தை முழுவதுமாக ஜனவரி மாதம் வெளியிடப்போவதாக அண்ணாமலை அறிவித்திருந்தார். ஆனால், அதற்கு பாஜக மேலிடம் முட்டுக்கட்டை போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
திமுக செய்ததாகக் கூறப்படும் ஊழல்கள் அடங்கிய விவரங்களை DMK Files-3 என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட தயாரான நிலையில், அதற்கு பாஜக மேலிடம் முட்டுக்கட்டை போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினர் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் ஊழல் பட்டியலை வெளியிட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், திமுக ஃபைல்ஸ் முதல் பாகத்தை அண்ணாமலை வெளியிட்டார்.
அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட மேலிடம்:
அதில், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட சிலரின் சொத்துப் பட்டியல் இடம் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து 3 மாதங்கள் கழித்து திமுக ஃபைல்ஸ் இரண்டாவது பாகத்தை வெளியிட்டார். அதில், அரசுத் துறைகளில் பல்வேறு ஒப்பந்தப் பணிகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் வெளியாகி இருந்தன.
பின்னர், DMK Filesஇன் மூன்றாவது பாகத்தை ஆடியோ வடிவில் அண்ணாமலை, இந்தாண்டு ஜனவரி மாதம் வெளியிட்டார். அதில், முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய திமுக எம்.பியுமான டி.ஆர். பாலு மற்றும் தமிழக உளவுத்துறை முன்னாள் தலைவர் ஜாஃபர் சேட் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்று இருந்தன.
இதை தொடர்ந்து, திமுக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா மற்றும் உளவுத்துறை முன்னாள் தலைவர் ஜாஃபர் சேட் இடையிலான தொலைபேசி உரையாடல்களை வெளியிட்டார். இந்த உரையாடலில், எதுவும் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. எனினும் வழக்கு விசாரணை எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பது குறித்து ஆ.ராசா பேசுவது போன்ற ஆடியோ வெளியிடப்பட்டிருந்தது.
தள்ளிப்போகும் DMK Files-3:
இந்த நிலையில், DMK Filesஇன் மூன்றாவது பாகத்தை முழுவதுமாக ஜனவரி மாதம் வெளியிடப்போவதாக அண்ணாமலை அறிவித்திருந்தார். ஆனால், அதற்கு பாஜக மேலிடம் முட்டுக்கட்டை போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
DMK Filesஇன் மூன்றாவது பாகத்தை வெளியிடுவது குறித்த பாஜக மேலிடத்திடம் அண்ணாமலை பேசியதாகவும் ஆனால், அதற்கு பாஜக மேலிடத்தில் சரிவர பதில் வரவில்லை என தெரிகிறது. இப்போது வெளியிட்டால் மக்கள் மறந்துவிடுவார்கள் என்றும் சரியான நேரத்தை நாங்கள் சொல்கிறோம் என அண்ணாமலையிடம் பாஜக மேலிடம் கூறியதாக தகவல்கள் கசிந்துள்ளன.
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி படுதோல்வி அடைந்த நிலையில், தமிழகத்தின் அரசியல் சூழல்களுக்கு ஏற்ப புது வியூகத்தை பாஜக மேலிடம் வகுத்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், திமுகவுடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல் இருக்க பாஜக மேலிடம் விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது.