கரூரில் பாஜக சார்பில்" நம்ம ஊரு பொங்கல் திருவிழா" கொண்டாட்டம்
கரூர் மாநகராட்சி மற்றும் பாஜக சார்பில் பொங்கல் திருவிழாவை பொதுமக்கள் முன்னிலையில் கொண்டாடினர்.

கரூரில் பாஜக சார்பில் நடைபெற்ற நம்ம ஊரு பொங்கல் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பொன்னகர் பகுதியில் வடக்கு மாநகர பாரதிய ஜனதா கட்சி சார்பாக நம்ம ஊரு மோடி பொங்கல் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த பொங்கல் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். 101 சில்வர் பானைகளில் பச்சரிசி, வெல்லம், பருப்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் இட்டு பொங்கலோ பொங்கல் என்ற பெண்களின் கோஷத்துடன் பொங்கல் பொங்கியது.வடக்கு மாநகர பாஜக தலைவர் ரவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவு, பரதநாட்டியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

கரூர் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் திருவிழா - மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் இணைந்து கொண்டாடினர்.
கரூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா இன்று நடைபெற்றது. 48 வார்டு கொண்ட கரூர் மாநகராட்சியில் வார்டு வாரியாக பல வண்ண கோலப்போட்டி நடைபெற்றது. இதில் பொங்கல் பானை, கரும்பு, உதயசூரியன் உள்ளிட்ட ஓவியங்களுடன் சிக்கல் கோலங்கள், பலவண்ண புள்ளி கோலங்கள், ரங்கோலி உள்ளிட்ட வகைகளில் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் போட்டி போட்டுக்கொண்டு கோலம் போட்டனர்.

இதேபோல் புது பானையில் பச்சரிசி, வெள்ளம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் கலந்து, பொங்கல் பொங்கி வரும் நேரத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து "பொங்கலோ பொங்கல்" என்று உரத்த குரலில் குலவை சத்தமிட்டனர்.மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் திருவிழாவில் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், கவுன்சிலர்கள், அதிகாரிகள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் இணைந்து பொங்கல் திருவிழாவை கொண்டாடினர்.சமத்துவ பொங்கல் திருவிழாவில் நடைபெற்ற கோலப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
ஊராட்சிகளில் நாளை சமத்துவ பொங்கல்:
தமிழர் திருநாளாம் தை பொங்கல் திருநாளில் சுகாதாரம் மேம்படவும், ஒவ்வொரு கிராம தரம் மேம்படவும், ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் சுகாதாரப் பொங்கல் மற்றும் சமத்துவ பொங்கல் விழா நாளை 13ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதில் கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில் ஊராட்சி தலைவர் வார்டு உறுப்பினர்கள் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பங்கு கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சியில் இன்று விளையாட்டுப் போட்டி:
கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று 12-ம் தேதி சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டி நடக்கிறது. இது குறித்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கூறியிருப்பதாவது, 2023 ஆம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று காலை 6:30 மணிக்கு சமத்துவ பொங்கல் விழா நடக்கிறது. அதன் பின் சிஎஸ்ஐ விளையாட்டு மைதானத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் கவுன்சிலர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.





















